
தினகரனை யாரும் அதிகாரபூர்வமாக விலக்கிவைக்க எடப்பாடி அணியில் யாரும் தயாராக இல்லை எனவும், அவர்களின் வாய்மொழி கூற்றை ஏற்க நாங்கள் தயாராக இல்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இலைக்காக சிறைசென்று திரும்பியதுமே தனது சித்து விளையாட்டை தொடங்கிய, தினகரனுக்கு எதிராக எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 17 அமைச்சர்கள் நேற்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், 'கடந்த ஏப்ரல் 17 அறிவித்தபடி தினகரனுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்துக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களைச் சார்ந்து நாங்கள் இல்லை. அவர்களில்லாத நல்லாட்சி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தினகரன் ஒதுங்க வேண்டும்' என கூறினார்.
இதற்கு பதிலளித்த அதிமுக-வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், என்னை ஒதுங்கச்சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை. கட்சியிலிருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. பொதுச்செயலாளர் பதவியைத் தானாக கையில் எடுத்துக் கொண்டுள்ளார் மாண்புமிகு ஜெயக்குமார். என்னை பதவியிலிருந்து ஒதுங்க சொல்லும் அதிகாரம் அவருக்கு யார் கொடுத்தது என்றார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், 'இவர்கள் அனைவரும் ஒதுக்குகிறோம், ஒதுக்குகிறோம் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தினகரனை அதிகாரபூர்வமாக கட்சியிலிருந்து யாரும் விலக்கி வைக்க தயாராக இல்லை. ஆட்சி அதிகாரத்தில் அமர தினகரன் அணிக்கும், பழனிசாமி அணிக்கும் இடையில் யுத்தமே நடந்து வருகிறது. இவர்களின் வாய் கூற்றை ஏற்க நாங்கள் தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.