
தோல்வி பயத்தால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலை டிடிவி தினகரன் நிறுத்த முயற்சி செய்வதாக ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி மைத்ரேயன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி இரண்டாக உடைந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம், மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகரில் இடைத்தேர்தலை அறிவித்தது.
தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை கேட்டு இரு அணிகளும் மோதிக்கொண்டன. கடைசியில் தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம் இரண்டையும் முடக்கியது.
அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டதால் இந்த இரு அணிகளும் தனித்தனி சின்னம், பெயர் கொண்டு ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் குதித்துள்ளன.
இந்நிலையில் இரு அணிகளும் தேர்தல் களத்தில் காரசாரமாக பேசி கொண்டும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டும் வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே அடிதடி சண்டை, கைகலப்பு என வன்முறைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த தினகரன் அணியினர் திட்டமிட்டுள்ளதாக ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி., தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தேர்தலை நிறுத்த சதி செய்துள்ளதாகவும் அவர் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
மேலும் அவர், தோல்வி பயம் காரணமாகவே தினகரன் அணியினர் தேர்தலை நிறுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.