மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: சரத் பவார் பதிலடி; ஏக்நாத் ஷிண்டேவுக்கு செக் வைத்த சிவ சேனா

By Dhanalakshmi GFirst Published Jun 21, 2022, 4:58 PM IST
Highlights

சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே ஏறக்குறைய 
20 எம்.எல்.ஏக்களுடன் எஸ்கேப் ஆகி இருப்பது சிவ சேனாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக சட்டசபை கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்கரே விடுவித்துள்ளார்.
 

நாடெங்கும் மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் களம் களை கட்டத் துவங்கியுள்ளது. மகாராஷ்டிரா
 மாநிலமும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இந்த மாநிலத்தை ஆளும் சிவ சேனா கட்சிக்கு 
சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் சிவ சேனா நீடிக்குமா? நீடிக்காதா? என்ற சூழல் உருவாகியுள்ளது. 

சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே ஏறக்குறைய 
20 எம்.எல்.ஏக்களுடன் எஸ்கேப் ஆகி இருப்பது சிவ சேனாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சிவ சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றன. இந்த நிலையில்தான் அந்த மாநிலத்தில் எம்எல்சி தேர்தல் நடந்தது. 

இந்த தேர்தலில் பாஜகவுக்கு போதிய ஆதரவு இல்லாமல் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இதற்குக் காரணம் கட்சி மாறி வாக்களித்ததுதான் என்ற 
குரல் எழுந்தது. இந்த நிலையில்தான், கட்சி மாறி வாக்களித்தவர்கள், சிவ சேனா 
அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பின்னணியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் என்பது 
தெரிய வந்தது.இந்த செய்தி வெளியாவதற்கு முன்பே ஷிண்டே தனது ஆதரவு 
எம்.எல்.ஏக்களுடன் குஜராத் மாநிலம் சூரத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில்  
தஞ்சம் அடைந்தார். முன்பு ஏக்நாத் ஷிண்டே கையில் 
பத்து சிவ சேனா எம்.எல்.ஏக்கள் என்று நம்பிக் கொண்டு இருந்த நிலையில், 
அந்த எண்ணிக்கை தற்போது இருபது என்று கூறப்படுகிறது. 

இந்த  நிலையில் சிவ சேனா ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிகளவில் 
எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்றதால், சிவ சேனா கட்சியின் பலம் குறைந்து, 
பாஜக ஆட்சி அமைக்கும் என்ற சூழலும் உருவாகியுள்ளது. கட்சி மாறுதலுக்கு எதிரான சட்டத்தின்படி, 
ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பலம் 
இருக்க வேண்டும். சிவ சேனாவுக்கு மொத்தமே 55 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். 

இந்த கணக்கின்படி பாஜகவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இணைய வேண்டும் என்றால் அதிருப்தி 
கோஷ்டிக்கு 37 எம்.எல்.ஏக்கள் பலம் இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி தாவல் செல்லுபடி ஆகும். 
அப்படி ஒரு சூழல் உருவாகும்பட்சத்தில் பலத்தை நிரூபிக்க 
சிவ சேனாவுக்கு முதலில் வாய்ப்பு அளிக்கப்பட்டு, பின்னர் பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். 

இதுகுறித்து பேட்டி அளித்து வரும் பாஜக மூத்த தலைவர்களும் பொறுத்து இருந்து பாருங்கள், 
சிவ சேனா எப்படி தங்களது பலத்தை நிரூபிக்கப் போகிறார்கள் என்று சவால் விட்டு வருகின்றனர். 

இதன் தொடர்ர்ச்சியாக விழித்துக் கொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சியும் உள்கட்சி 
விவகாரங்களில் தலையிட்டு சிக்கலை தீர்க்க கட்சியின் மூத்த தலைவரான கமல் நாத்தை நியமித்துள்ளது.

தானா மண்டலத்தில் பலம் பொருந்திய ஏக்நாத்  ஷிண்டே சமீபத்தில் நடந்த தானே
 நகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். 
ஆனால், கட்சி தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் மற்றும் 
தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்துதான் போட்டியிட வேண்டும் உறுதியாக தலைமை கூறிவிட்டது. 
இதுவே கட்சிக்குள் குழப்பம் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கட்சி எம்.எல்.ஏக்களை முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திக்க இருப்பதாக செய்தி வெளியானது.
மேலும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் உத்தவ் தாக்கரேவை
 சந்தித்ததாக கூறப்படுகிறது. 

மகாராஷ்டிரா சட்டசபையில் மொத்தம் 288  உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் சிவ சேனா எம்.எல்.ஏ. 
ரமேஷ் லட்கே கடந்த மாதம் இறந்து விட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் 
மற்றும் அனில் தேஷ் முக் இருவரும் சட்ட விரோத பணம் கையாடல் தொடர்பாக சிறையில் உள்ளனர். 
மீதமுள்ள 285 உறுப்பினர்கள் மட்டுமே சட்டசபை கவுன்சில் தேர்தலில் கலந்து கொண்டனர்.

தற்போது சிவ சேனாவுக்கு 55 எம்.எல்.ஏக்கள் ஆதரவும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்.எல்.ஏக்கள் 
ஆதரவும், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் உள்ளது. பாஜகவுக்கு 
மொத்தம் 106 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. 

சிறிய கட்சிகள், சுயேச்சைகள் என்று 29 உறுப்பினர்கள் உள்ளனர். இதன்படி 5 எம்.எல்.சிக்களை பெறுவதற்கு
பாஜகவுக்கு 133 பேர் வாக்களித்துள்ளனர். சிவ சேனா தலைமையிலான கூட்டணிக்கு 152 எம்.எல்.ஏக்கள்
வாக்களித்து உள்ளனர்.

இந்நிலையில் பேட்டி அளித்து இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்,
''தான் முதல்வர் ஆக வேண்டும் என்று எப்போதும் எங்களிடம் ஏக்நாத் ஷிண்டே சொன்னது கிடையாது. 
தற்போது நடந்து வருவது சிவ சேனாவின் உள்கட்சி பூசல். அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதுபோன்ற
 சம்பவம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்றாவது முறை நடக்கிறது. தேசியவாத எம்.எல்.ஏக்கள் 
அனைவரும் கட்சிக்கே வாக்களித்து உள்ளனர்'' என்றார். 

இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சிவ சேனா பெயரை நீக்கி
தலைமைக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.

இறுதியாக சட்டசபை கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்கரே விடுவித்துள்ளார்.
இவருக்கு பதிலாக சேவ்ரி எம்.எல்.ஏ., அஜய் சவுதாரி சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

click me!