
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் தொடுத்த வழக்கு வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராசன் மனு தொடுத்திருந்தார்.
மனுவில், சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தியது, மறைமுக வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உரிமை இருந்தும் அதை பயன்படுத்தாதது குறித்து மனுவில் கூறப்பட்டது.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எம்.எல்.ஏக்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மாஃபா பாண்டியராஜன் சார்பில், மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் ஆஜரானார்.
அப்போது, பல்வேறு கேள்விகளை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. கூவத்தூரில் நடந்தது என்ன, பேரம் பேசிய விவகாரம் குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என மாஃபா பாண்டியராஜன் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கூறினார்.
கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டது குறித்தும், அவர்கள் ஒருவித அழுத்தத்தில் உள்ளபோது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றும், இது ரகசியமான முறையில் நடைபெற்றிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்றும் மாஃபா பாண்டியராஜன் தரப்பில் கூறப்பட்டது.
அதற்கு சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டம் இருக்கிறதா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் நடத்தக்கூடாது என்றும் சட்டத்தில் கூறப்படவில்லை தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஜூலை 11 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.