நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நடிகர் சூர்யாவின் பேச்சு... பாஜகவினரை சகட்டுமேனிக்கு விளாசி தள்ளிய தமிழக எம்.பி.!

By Asianet TamilFirst Published Jul 25, 2019, 9:39 PM IST
Highlights

நடிகர் சூர்யாவுக்கு கமல்ஹாசன், ரஜினி, சீமான், இடதுசாரிகள் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார் மதுரை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன். 
 

புதிய தேசிய கல்வி கொள்கையைப் பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும்படி கூறிவிட்டு, அப்படி கருத்து கூறிய நடிகர் சூர்யாவை பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்வது பற்றி நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்தார் மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன்.


புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுபற்றி கல்வியாளர்கள் மட்டுமே பேசிவரும் நிலையில், நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை விழாவில் பேசினார். புதிய தேசிய கல்வி கொள்கையையும் நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளையும் விமர்சித்து பேசினார் நடிகர் சூர்யா. குறிப்பாக அதிலிருக்கும் 10 குளறுபடிகளை சூர்யா பட்டியலிட்டார். அவருடைய பேச்சுக்கு பொதுவெளியில் ஆதரவு ஏற்பட்ட நிலையில் பாஜகவினர் விமர்சிக்கத் தொடங்கினர்.

 
குறிப்பாக அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “சூர்யா வன்முறையைத் தூண்டும்படி பேசுகிறார்” என்று தெரிவித்தார். தமிழக அமைச்சர்களும் சூர்யாவுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தனர். நடிகர் சூர்யாவுக்கு கமல்ஹாசன், ரஜினி, சீமான், இடதுசாரிகள் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார் மதுரை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன். 
 “புதிய கல்விக் கொள்கையின் மீது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறுகிறது. அந்த அடிப்படையில்  நடிகர் சூர்யா கருத்து கூறினார். அதற்கு தமிழக பாஜக தலைவர்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். அவரை மிரட்டுகிறார்கள். புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு அளிக்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். கல்வி கொள்கை குறித்து  அரசு கருத்துக் கேட்கும் நிலையில், பாஜகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை மீது மக்கள் கருத்து கூற வேண்டுமா, இல்லையா? அல்லது அதற்கு ஆதரவு கூற வேண்டுமா?” என்று அதிரடியாகப் பேசினார்.

click me!