கடன் தள்ளிவைப்பு காலத்துக்கான கூட்டு வட்டியை கைவிட வேண்டும்: நிதி அமைச்சருக்கு மதுரை எம்.பி அதிரடி கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2020, 1:13 PM IST
Highlights

எல்லா குறு சிறு நடுத்தர தொழில்களுக்கும் இத் தள்ளுபடி விரிவடைகிற வகையில் வரம்பு உயர்த்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இம் முடிவு எல்லா வகையான நிதி நிறுவனங்களையும் அதாவது வங்கி அல்லா நிதி நிறுவனங்களையும், உள்ளடக்கியதாக இருக்குமென்று நம்புகிறேன்.

கடன் தள்ளிவைப்பு காலத்துக்கான கூட்டு வட்டியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்  கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் முழு விவரம்:- 

கடன் தள்ளி வைப்பு காலத்திற்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ள வாக்கு மூலம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.ஏற்கென்வே கடன் தள்ளி வைப்பு காலத்திற்கான இ.எம்.ஐ தவணைகள் மீது வட்டிக்கு வட்டி போடுவதைக் கைவிட வேண்டுமென்று நான் தங்களுக்கு கடிதம் எழுதியிருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

இது பேரிடரால் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கிற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். தற்போது உச்ச நீதி மன்றத்தின் தலையீட்டால் இக் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அரசு முன் வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அரசு "கஜேந்திர சர்மா (எ) மத்திய அரசு" வழக்கில் இது குறித்து சமர்ப்பித்துள்ள வாக்கு மூலத்தில் ரூ 2 கோடி வரையிலான கடன்கள் மீது "வட்டிக்கு வட்டி" விதிப்பை திரும்பப் பெறுவதாக கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. எல்லாக் கடன்களுக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆழமான நெருக்கடியை விட்டு மீண்டு வர உதவுமா என்ற கவலையை குறு சிறு நடுத்தர தொழிலதிபர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

ஆகவே எல்லா குறு சிறு நடுத்தர தொழில்களுக்கும் இத் தள்ளுபடி விரிவடைகிற வகையில் வரம்பு உயர்த்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இம் முடிவு எல்லா வகையான நிதி நிறுவனங்களையும் அதாவது வங்கி அல்லா நிதி நிறுவனங்களையும், உள்ளடக்கியதாக இருக்குமென்று நம்புகிறேன். அதற்குரிய வகையில் அரசின் அறிவிப்புகள் தெளிவாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.உங்களின் சாதகமான மறு மொழியை எதிர்நோக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!