
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யும் ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனை தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், அதையும் மீறி பணப்பட்டுவாடா நடந்துவருகிறது.
துணை ராணுவப்படையினர், தேர்தல் பார்வையாளர்கள், பறக்கும்படையினர், போலீசார் என இத்தனை கண்காணிப்புகளையும் மீறி பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா செய்வதற்கு போலீசாரும் தேர்தல் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக திமுகவும் தினகரனும் குற்றம்சாட்டுகின்றனர்.
பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா, அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆளும் அதிமுகவினரும் தினகரன் தரப்பும் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. நேற்றைய முன் தினம் ஒரே நாளில் 100 கோடி ரூபாயை அதிமுகவினர் பட்டுவாடா செய்ததாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்களுடன் விக்ரம் பத்ராவிடம் புகார் கூறியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுங்கட்சியான அதிமுகவும் தினகரன் தரப்பும் கோடி கோடியாக பட்டுவாடா செய்துவருகின்றனர் என குற்றம்சாட்டினார். அதிமுக பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ ஆதாரங்களுடன் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் புகார் கூறியுள்ளதாகவும் எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் பணப்பட்டுவாடா செய்யும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.