
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணக்கட்டு மற்றும் குண்டர்களுடன் டி.டி.வி. தினகரன் களம் இறங்குகிறார் என மதுசூதனன் குற்றம் சாட்டி உள்ளார்.
ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி திமுகவில் மருதுகணேஷ், அதிமுகவின் சசிகலா அணியில் டி.டி.வி.தினகன், ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என 3 பேர் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.
இதேபோல் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன், தேமுதிகவில் மிதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன், ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்ட இளைஞர்கள் சார்பில் துவங்கப்பட்டுள்ள என் தேசம் என் உரிமை கட்சியில் ஜெயந்தி சந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் போட்டியிடும் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இந்த இரு அணிகளின் போட்டியால், அதிமுகவுக்கு சேர வேண்டிய வாக்குகள், யாருக்கு போகும் என குழம்பி வருகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து பொறுப்பாளர்களை அமைத்து, தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணி வேட்பாளார் மதுசூதனனை, தொகுதி பிரதிநிதிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தன்னுடன் பணியாற்றிய முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பிரமுகர்களுடன் ஆதரவு கேட்டு வருகிறார்.
மேலும், தொகுதி முழுவதும் பொறுப்பாளர்களுடன் சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
நான் பதவியில் இருந்த போது இந்த பகுதி மக்களுக்கு வைத்தியநாதன் பாலம் அமைத்து தந்தேன். இதேபோல் தெரு விளக்கு, பாதாள சாக்கடை, மேலும் பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். இன்னும் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பேன்.
இடைத்தேர்தலுக்காக சசிகலா அணி டி.டி.வி. தினகரன் பணத்தை வாரி இரைக்கிறார். இதனை வினியோகம் செய்ய அடியாட்களை, தொகுதிக்குள் புகுத்தியுள்ளார்.
50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தினகரன் கூறியுள்ளார். அவர் பகல் கனவு காண்கிறார். அது பலிக்காது.
சசிகலாவின் அணிக்கு முடிவு கட்ட வேண்டும். உண்மையான அதிமுக நாங்கள்தான். எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.