தேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

Published : Oct 20, 2020, 10:03 PM IST
தேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

சுருக்கம்

பதவி போனதும் இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுவார்கள். அவர்கள் எந்தத் திசைக்கு போனாலும், எங்கே தலைமறைவு ஆனாலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமாக இருந்தாலும், கொடநாடு கொலை கொள்ளை விவகாரமாக இருந்தாலும், லஞ்ச லாவண்ய வழக்குகளாக இருந்தாலும் - அவை சட்டபூர்வமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

தேனி மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், “இன்றைய ஆட்சிக்கு இப்படி எந்த இலக்கணமும் இல்லை. கலெக்சன், கமிஷன், கரெப்சன் ஆகிய மூன்றும்தான் இவர்களது இலக்கணம். அதனால்தான் அ.தி.மு.க. ஆட்சியானது எத்துணை அலங்கோல ஆட்சியாக இருக்கிறது என்பதை பேராசிரியர் அருணன் அவர்கள் சொன்னார்கள். ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தி.மு.க. ஆட்சி. ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அ.தி.மு.க. ஆட்சி.


இவை மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சண்டை போடுவதைப் போன்ற ஒரு நாடகத்தை நடத்தி மக்களை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். பதவி இருக்கும் வரை இவர்கள் இருவரும் பிரிய மாட்டார்கள். அவர்களுக்குள் சண்டை என்பதெல்லாம் மக்கள் முன்னால் நடத்தப்படும் நாடகங்கள். இதே பன்னீர்செல்வம் தான், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்லி தர்ம யுத்தம் தொடங்கினார். இன்று அவரே அந்த விசாரணைக்கு தடையாக அதர்ம யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததாகச் சொல்லப்பட்டது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி. போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டது செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு. இடைப்பட்ட 73 நாட்கள் அவர் எப்படி இருந்தார் என்பது வெளியில் இருக்கும் நம் யாருக்கும் தெரியாது. தனக்கே தெரியாது என்று பன்னீர்செல்வம் சொன்னார். சசிகலா குடும்பத்துக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மட்டும்தான் தெரியும் என்று சொன்னார்.


சமாதிக்கு போனார், தியானம் செய்தார், முகத்தைத் துடைத்துக் கொண்டார் - இவை எல்லாம் உங்களுக்குத் தெரியும். திடீரென்று அ.தி.மு.க.வில் மீண்டும் பன்னீர்செல்வம் இணைந்தார். ஏன் இணைகிறீர்கள் என்று கேட்டபோது, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க ஒப்புக் கொண்டார்கள் என்று சொன்னார். அதனடிப்படையில்தான் ஆறுமுகச் சாமி ஆணையம் அமைக்கப்பட்டது. 25.9.2017ம் நாள் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இது வரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்த ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வமும் ஆஜராகவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆஜராகவில்லை. விஜயபாஸ்கர்தான் காரணம் என்று சொல்கிறார் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வம்தான் காரணம் என்று சொல்கிறார் விஜயபாஸ்கர். இவர்கள் சொல்வதைப் பார்த்தால் இவர்கள் இரண்டு பேருக்குமே ஏதோ பங்கு இருப்பது தெரிகிறது. இவர்கள் இருவரும் நேர்மையானவர்களாக இருந்தால் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கோ, பன்னீர்செல்வத்துக்கோ ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருக்குமானால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தந்திருக்க வேண்டும்.
ஜெயலலிதா இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. இவ்வளவு பணம் சம்பாதித்திருக்க முடியாது. அந்த நன்றி உணர்ச்சி அவர்களுக்கு கொஞ்சமும் கிடையாது. தாங்கள் பதவிக்கு வரக் காரணமாக இருந்த, தாங்கள் பணம் சம்பாதிக்கக் காரணமாக இருந்த ஜெயலலிதாவுக்கே நன்றியில்லாதவர்களாக எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் கிடையாது.
ஆறுமாத காலம் கொள்ளைகள் தொடருவதற்காகத்தான் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக இருப்பதைப் போல நடிக்கிறார்கள். பதவி போனதும் இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுவார்கள். அவர்கள் எந்தத் திசைக்கு போனாலும், எங்கே தலைமறைவு ஆனாலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமாக இருந்தாலும், கொடநாடு கொலை கொள்ளை விவகாரமாக இருந்தாலும், லஞ்ச லாவண்ய வழக்குகளாக இருந்தாலும் - அவை சட்டபூர்வமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழியாக இந்த தேனி முப்பெரும் விழா கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்." என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

எம்ஜிஆர், ஜெ. காலத்தில் இருந்த வரவேற்பு.. TVKவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. செங்கோட்டையன் ஓபன் டாக்
ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!