அதிமுக அரசுக்கு மிக்க நன்றி... பேரணிக்கு விளம்பரம் தேடி தந்ததாக மு.க. ஸ்டாலின் ஹேப்பி!

By Asianet TamilFirst Published Dec 22, 2019, 10:38 PM IST
Highlights

நிபந்தனைகளை ஏற்றால் பேரணிக்கு அனுமதி வழங்குவீர்களா என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ட்ரோன் கேமரா மூலம் பேரணியை கண்காணித்து, நிபந்தனைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்காலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  அரசு தரப்பு வாதங்களின் அடிப்படையில் திமுக பேரணிக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பேரணிக்கு நீதிமன்றம் வழங்கியது. 
 

திமுக பேரணிக்கு அதிமுக அரசே ஒரு விளம்பரத்தை தேடி தந்துள்ளது. அதற்காக அதிமுகவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்த மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவானது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது. கட்சிகளைத் தாண்டி அனைத்து தரப்பினரும் இப்பேரணியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

 
இந்நிலையில் சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக கூட்டணியின் பேரணிக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் தாக்கல் செய்தார். மனுவில், “பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும்; பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படும்” என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான் வழக்கு அவசர வழக்காக விடுமுறை தினமான ஞாயிற்று கிழமை இரவில் விசாரிக்கப்பட்டது. விடுமுறைக்கான சிறப்பு அமர்வில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

 
இந்த வழக்கில் அரசு தரப்பி ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், இந்தப் பேரணிக்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. உருவ பொம்மை எரிக்கப்படுமா, சட்ட நகல் கொளுத்தப்படுமா என்று திமுகவிடம் போலீஸார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நிபந்தனைகளை ஏற்றால் பேரணிக்கு அனுமதி வழங்குவீர்களா என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ட்ரோன் கேமரா மூலம் பேரணியை கண்காணித்து, நிபந்தனைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்காலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  அரசு தரப்பு வாதங்களின் அடிப்படையில் திமுக பேரணிக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பேரணிக்கு நீதிமன்றம் வழங்கியது.

 
இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவு வெளியான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். “ திமுக பேரணியை தடுக்க சிலரை பயன்படுத்தி அவர்கள் மூலம் அதிமுக திட்டமிட்டது. திமுக பேரணிக்கு அதிமுக அரசே ஒரு விளம்பரத்தை தேடி தந்துள்ளது. அதற்காக அதிமுகவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய பேரணிக்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. விதிமுறைகளுக்குட்பட்டு இந்தப் பேரணி நடைபெறும். நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் வராததால் வழக்கு விசாரணையில் திமுக பங்கேற்கவில்லை” என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

click me!