இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவு... கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் மு.க. ஸ்டாலின் துயரம்..!

By Asianet TamilFirst Published Sep 30, 2020, 8:33 PM IST
Highlights

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன், மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 27ம் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. இந்நிலையில், 94 வயதான ராமகோபாலன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்நிலையில் ராமகோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள் இரங்கல் செய்தியில், “இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராமகோபாலன் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சிந்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், கருணாநிதியும் ராமகோபாலனும் நல்ல நண்பர்களே! அவர்களிடையே இருந்த பரஸ்பர நன்மதிப்பு, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் கண்ணியம், பண்பாடு மற்றும் பக்குவம் நிறைந்த நட்புணர்வு ஆகியவற்றை நான் அறிவேன்.

 
இருவரும் நேரில் சந்தித்து அளவளாவிய நேரங்களில்கூட, தத்தம் கொள்கைகளில் இருவருமே உறுதியாக இருந்தவர்கள். அந்தக் “கொள்கைச் சுதந்திரம்” இருவரின் நட்புணர்வில் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை. ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான அவரது மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என இரங்கல் செய்தியில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

click me!