நாடாளுமன்றமே நடுங்குது... திமுக எம்.பி.க்கள் செய்துகாட்டுகிறார்கள்... அதிரடியாகப் பேசிய மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Aug 7, 2019, 10:14 PM IST
Highlights

கருணாநிதி என்றால் சமூக நீதியும் மாநில சுயாட்சியும் என்றே அர்த்தம். தற்போது மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பைவிட இப்போதுதான் கருணாநிதி நமக்கு அதிகம் தேவைப்படுகிறார்.  

திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட இயக்க முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்தார். அதன்பிறகு கருணாநிதி நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
இழக்கக் கூடாத தலைவரை இழந்துவிட்டு நிற்கிறோம். பேனாவையும் பேப்பரையும் கருணாநிதியிடம் கொடுத்தபோது அவர் அண்ணா என்றே எழுதினார். கருணாநிதியின் காதுகளில் எப்போதும் முரசொலி என்றே ஒலித்தது. இந்தியாவில் கருணாநிதியைப் போன்ற தலைவர் யாரும் இல்லை. திமுகவை 50 ஆண்டுகளாக வளர்த்துக் கொடுத்தவர் கருணாநிதி. இந்திய அரசியல் சக்கரத்தை சுழல வைத்தவரும் அவரே. 
தற்போது தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. சமூக நீதிக்கு உலை வைக்க, 10 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்திருக்கிறார்கள். கருணாநிதி என்றால் சமூக நீதியும் மாநில சுயாட்சியும் என்றே அர்த்தம். தற்போது மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பைவிட இப்போதுதான் கருணாநிதி நமக்கு அதிகம் தேவைப்படுகிறார்.  திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே தினந்தோறும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி என்ன நினைப்பாரோ அதை திமுக எம்.பி.க்கள் தற்போது செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

click me!