இரக்கமற்ற மத்திய அரசு... எப்போது நீட் தேர்வை நிறுத்தும்..? மு.க. ஸ்டாலின் சீற்றம்..!

By Asianet TamilFirst Published Sep 9, 2020, 9:24 PM IST
Highlights

 நீட் தேர்வு மன உளைச்சலால் அரியலூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ‘இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்?’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தங்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் 19 வயதான விக்னேஷ். இரு ஆண்டுகளுக்கு முன்பு 12-ம் வகுப்பை முடித்த விக்னேஷ், நீட் தேர்வுக்காக தயாராகிவந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 370 மதிப்பெண்கள் எடுத்த விக்னேஷ், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு தயாராகிவந்ததாக தெரிகிறது.
வரும் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் விக்னேஷ் தேர்வு நெருங்க நெருங்க மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்வு பதற்றத்தால் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்னேஷ் மறைவையடுத்து ட்விட்டரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


அதில், “நீட் பலிபீடத்தில் மேலும் ஓர் உயிரை இழந்திருக்கிறோம். நீட் தேர்வுக்கு தயாரான அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவன், விக்னேஷ் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கிடைத்துள்ள தகவல் மனவேதனையை ஏற்படுத்துகிறது. இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்? இந்த நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்: எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக எதிர்கொள்ளுங்கள். தற்கொலை எண்ணத்தை விடுங்கள்!” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!