சிஏஏ கையெழுத்து இயக்கம்: மிஸ்டுகால் கட்சி... அதிர்ச்சியில் புலம்பி ஒப்பாரி... பாஜகவை காய்ச்சிய மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Feb 9, 2020, 9:01 PM IST
Highlights

தேர்தல் களமாக இருந்தாலும், கையெழுத்து இயக்கமாக இருந்தாலும், தமிழக மக்கள் திமுகவுக்கு அளித்துவரும் பேராதரவு கண்டு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் நடுங்குகின்ற காரணத்தால்தான், இதனைத் தடை செய்ய வேண்டும் என்றும், கட்டாயக் கையெழுத்து என்றும், தங்கள் நிலையைவிட்டு பலபடிகள் கீழே இறங்கி விமர்சனம் செய்கிறார்கள். மக்களுக்கு எதிரான-நாட்டை மதரீதியாகத் துண்டாடும் சி.ஏ.ஏ உள்ளிட்டவற்றை எதிர்த்து திமுக போராட்டம் தொடரும். மக்களின் ஆதரவுடன் - மக்களுக்கு எதிரான எதையும் முறியடித்து - மக்களின் நலன் காப்பதற்குத் தொடர்ந்து பாடுபடுவோம்!” அறிக்கையில்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிஸ்டுகால்களை நம்பியே உறுப்பினர் எண்ணிக்கை பற்றி உறக்கத்தில் மனக்கணக்கு போடுவது என செயல்படுகிறவர்களுக்கு, திமுகவும் தோழமைக் கட்சிகளும் மேற்கொண்ட கையெழுத்து இயக்கமும், அதற்கு மக்கள் காட்டிய வரவேற்பும் ஆர்வமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, இப்படித்தான் புலம்பி ஒப்பாரி வைத்திடச் செய்திடும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்காக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில், “மக்களின் பெரும் ஆர்வத்துடனும் தன்னிச்சையான பங்கேற்புடனும் கையெழுத்து இயக்கம் களிப்புறத்தக்க வெற்றி பெற்றிருப்பதை, நம்மைவிட நமது அரசியல் எதிரிகள் நன்றாக உணர்ந்து விட்டார்கள். மாநில அடிமை அரசில், நேரடி பாஜக. பிரதிநிதி போலவே செயல்படும் அமைச்சர் ஒருவர், “தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு ஏன் தடை செய்யாமல் இருக்கிறது?” என்று வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார். மத்திய பாஜக அரசில், முன்னாள் மாண்புமிகுவாக இருந்து மக்களிடம் தோல்வி அடைந்த மூத்த தலைவர் ஒருவர், “திமுக கட்டாயக் கையெழுத்து இயக்கம் நடத்துகிறது” என்று பேசியிருக்கிறார்.
கட்டாயமாகக் கையெழுத்து வாங்குவது, மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்த ஓய்வு பெற்ற நீதிபதிக்கு கட்டாயமாக பாஜக உறுப்பினர் அட்டையைக் கொடுப்பது, மிஸ்டுகால்களை நம்பியே உறுப்பினர் எண்ணிக்கை பற்றி உறக்கத்தில் மனக்கணக்கு போடுவது என செயல்படுகிறவர்களுக்கு, திமுகவும் தோழமைக் கட்சிகளும் மேற்கொண்ட கையெழுத்து இயக்கமும், அதற்கு மக்கள் காட்டிய வரவேற்பும் ஆர்வமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, இப்படித்தான் புலம்பி ஒப்பாரி வைத்திடச் செய்திடும்.


சி.ஏ.ஏ.வை நாடாளுமன்றத்தில் ஆதரித்த பாஜகவின் தோழமைக் கட்சிகள்கூட தற்போது உணர்ந்து அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதையும், பல மாநிலங்களின் சட்டப் பேரவைகளில், இந்த சட்டத்திற்கு எதிராகத் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருப்பதையும், குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் துணிச்சலாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் முதல்வர் பினராயி விஜயனின் உறுதிப்பாட்டையும் விளக்கி, அதுபோல தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாம் வலியுறுத்தியும், அடிமை அதிமுக அரசு அலட்சியப்படுத்தியதால்தான், சிஏஏவுக்கு எதிராக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்தைப் பெறும் இயக்கம் நடைபெறுகிறது என்பதையும் மக்களிடம் சொன்னேன். எதற்காக இந்த இயக்கம் என்பதை விளக்கிய பிறகே மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்துக்கள்-முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் எனப் பலரும் மத எல்லைகளைக் கடந்து, இந்தியாவைக் காத்திட வேண்டும் என்ற உண்மையான தேசப்பற்றுடன் கையெழுத்திட்டு ஆதரவு தந்தனர்.


மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும் அதன் தொடர் நடவடிக்கைகளாலும் முதலமைச்சர் பதவியில் எப்படியாவது நீடிக்க வேண்டும் என்பதற்காக எதையும் அடமானம் வைக்கும் எடப்பாடிக்கே ஆபத்து வரும் நிலை உள்ளது. அவருக்கு மட்டுமல்ல, திடீரென பேட்டி கொடுக்கக்கூடியவர்களுக்கும்கூட அவர்களின் பெற்றோர் பிறந்த இடமும், தேதியும் சரியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, நம்மை விமர்சிப்பவர்களையும் சேர்த்து அனைவரையும் பாதுகாக்கத்தான் இந்தக் கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். 2 கோடியைத் தாண்டியுள்ள கையெழுத்துகளை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்க இருக்கிறோம். அதன்பிறகும், மத்திய அரசு இதுபற்றிப் பரிசீலிக்கத் தவறினால், அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்.


பிப்ரவரி 14ந் தேதி கூடுகின்ற தமிழ் நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது, சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி, அதிமுக அரசு தனது பாவங்களுக்குக் கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் என்பதையும் மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் எக்காரணம் கொண்டும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை அ.தி.மு.க அரசு அனுமதிக்கக் கூடாது. பா.ஜ.க அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அடிமை அ.தி.மு.க அரசு இதனை செயல்படுத்த நினைத்தால் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை இப்போதே எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன்.


தோழமைக் கட்சித் தலைவர்களும், கழக நிர்வாகிகளும்-கழகத்தின் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களும் அயராமல் உழைத்திட்ட காரணத்தால்தான், கையெழுத்து இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி, புதிய வரலாற்றைப் படைத்திடும் வண்ணம் 2 கோடிக்கும் அதிகமான கையொப்பங்கள் பதிவாகியுள்ளன. மனமுவந்து முன்வந்து கையெழுத்திட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் களமாக இருந்தாலும், கையெழுத்து இயக்கமாக இருந்தாலும், தமிழக மக்கள் திமுகவுக்கு அளித்துவரும் பேராதரவு கண்டு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் நடுங்குகின்ற காரணத்தால்தான், இதனைத் தடை செய்ய வேண்டும் என்றும், கட்டாயக் கையெழுத்து என்றும், தங்கள் நிலையைவிட்டு பலபடிகள் கீழே இறங்கி விமர்சனம் செய்கிறார்கள்.
மக்களுக்கு எதிரான-நாட்டை மதரீதியாகத் துண்டாடும் சி.ஏ.ஏ உள்ளிட்டவற்றை எதிர்த்து திமுக போராட்டம் தொடரும். மக்களின் ஆதரவுடன் - மக்களுக்கு எதிரான எதையும் முறியடித்து - மக்களின் நலன் காப்பதற்குத் தொடர்ந்து பாடுபடுவோம்!” அறிக்கையில்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!