பெருந்தன்மையோடு இருங்க எடியூரப்பா... மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு புத்திமதி சொன்ன மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Oct 6, 2019, 10:30 PM IST
Highlights

ஏற்கனவே பல வகையிலும் சோதனைகளைச் சந்தித்துவரும் தமிழக விவசாயிகளின் நலனை இந்த முயற்சி மேலும் பாதிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கர்நாடக அரசும், மத்திய அரசும் உணர வேண்டும்.
 

மூத்த அரசியல் தலைவரான கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெருந்தன்மையோடு, இரு மாநில மக்களின் நல்லுறவு கருதி, மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


மேகதாது அணை கட்ட தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசுக்கு கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திமுக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. “எங்கள் மாநிலத்துக்குள் காவிரி நீரைப் பயன்படுத்ததான் மேகதாது அணை கட்டுகிறோம்” என்று விதண்டாவாதத்தை முன் வைத்து, மத்திய அரசிடம் புதிய அணை கட்ட மீண்டும் கர்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது, மிகுந்த ஆபத்தானது. கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றமே இறுதி செய்த காவிரி நதி நீர்ப் பங்கீடு ஆகிய அனைத்துக்கும் எதிராகத் திட்டங்களைத் தீட்டி, தமிழகத்துக்கான காவிரி நதிநீர் உரிமையை அடியோடு பறிப்பதை கர்நாடக மாநில அரசு தனது வஞ்சக சூழ்ச்சியாகக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. மத்தியில் உள்ள பாஜக அரசின் பாணியில், சகோதர மாநிலமான தமிழகத்துக்கு பாதிப்பை உண்டாக்க கர்நாடக அரசு எடுக்கும் இந்த நிலைப்பாடு, கூட்டாட்சியில் வரவேற்கத்தக்க ஒன்றல்ல.
அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி வரைவுத் திட்டத்திலும், கர்நாடக அரசு புதிய அணையை தமிழகத்தின் அனுமதியின்றி நிச்சயம் கட்ட முடியாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முன்னனுமதியின்றி மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை எந்தப் புதிய அணை திட்டத்துக்கும் அம்மாநில அரசுக்கு அனுமதி அளிக்கவே முடியாது. ஏற்கனவே பல வகையிலும் சோதனைகளைச் சந்தித்துவரும் தமிழக விவசாயிகளின் நலனை இந்த முயற்சி மேலும் பாதிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கர்நாடக அரசும், மத்திய அரசும் உணர வேண்டும்.


கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கக் கூடாது. இந்தத் திட்டத்துக்கு அனுமதிகோரி மீண்டும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கர்நாடக அரசின் விளக்க அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். மூத்த அரசியல் தலைவரான கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெருந்தன்மையோடு, இரு மாநில மக்களின் நல்லுறவு கருதி, மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!