அழகிரியின் போன் கால்! டி.கே.எஸ் இளங்கோவன் பதவி இழந்ததன் பின்னணி!

By vinoth kumarFirst Published Oct 19, 2018, 9:15 AM IST
Highlights

தி.மு.கவின் ஊடகத்துறை செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் திடீரென நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

தி.மு.கவின் ஊடகத்துறை செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் திடீரென நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தி.மு.க செய்தி தொடர்பாளராக நீண்ட காலமாக இருந்தவர் டி.கே.எஸ்.இளங்கோவன். அவரது செயல்பாடுகளால் ஏற்பட்ட நன் மதிப்பு காரணமாக ஊடகத்துறை செயலாளர் பொறுப்பை கருணாநிதி வழங்கியிருந்தார். எந்த விவகாரம் என்றாலும் தி.மு.க சார்பில் கருத்து தெரிவிக்கும் உரிமை டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. டி.கே.எஸ்.இளங்கோவனும் மிகவும் ஸ்ட்ரெய்ட் பார்வேர்டு என்று பெயர் எடுத்தவர்.

 

தினமும் தவறாமல் அண்ணா அறிவாலயம் வந்து விடும் இளங்கோவன் கருணாநிதி, ஸ்டாலின் உள்பட யாருக்கும் ஜால்ரா அடிக்காதவர் என்றும் சொல்லப்படுகிறது. அண்ணா அறிவாலயத்திலேயே இருந்தாலும் கூட யாரிடமும் காசு வாங்காதவர் என்கிற பெயரும் இளங்கோவனுக்கு உண்டு. அதே சமயம் உண்மையான கட்சிக்காரர்களுக்காக அரசுப் பணிகள் தொடங்கி நலத்திட்ட உதவிகள் வரை சிபாரிசு செய்யும் பழக்கம் உடையவர் என்று இளங்கோவன் பற்றி சொல்கிறார்கள்.

 

இதனால் தான் கடந்த 2015ம் ஆண்டு கூட்டணி தொடர்பாக சர்ச்சைக்குறிய கருத்து கூறியதால் இளங்கோவனிடம் இருந்து மன்னிப்பு கடிதம் மட்டும் பெற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதாவது 2015ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்த இளங்கோவன், தி.மு.க அதிக இடங்களில் போட்டி இட வேண்டி உள்ளதால் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று கூறியிருந்தார். கூட்டணி குறித்து இளங்கோவன் வெளிப்படையாக அப்போது பேசியது கருணாநிதிக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது. 

உடனடியாக இளங்கோவன் பேட்டிக்கு மறுப்பு தெரிவித்து தி.மு.க தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலை உருவானது. ஆனாலும் கூட டி.கே.எஸ் இளங்கோவன் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் அவரது நேர்மையான செயல்பாடு தான் என்று கூறப்பட்டது. முதலில் கனிமொழி ஆதரவாளராக இருந்த இளங்கோவன் கட்சியில் வளர்ச்சி அடைந்த பிறகு எந்த கோஷ்டியிலும் சேராமல் தனித்து இயங்கி வந்துள்ளார். இந்த நிலையில் தான் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு அ.தி.மு.கவை அழைக்கப்போவதில்லை என்று பேட்டி அளித்து இளங்கோவன் பதவியை இழந்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின. 

உண்மையில் அவர் பதவியிழக்க காரணம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி இல்லை என்கிறார்கள். பேட்டி அளிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் மு.க.அழகிரி செல்போன் மூலம் டி.கே.எஸ்.இளங்கோவனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் சில விஷயங்களையும் சீரியசாக அழகிரி இளங்கோவனிடம் தெரிவித்துள்ளார். அழகிரி கூறிய விஷயங்கள் சீரியசானவை என்பதால் உடனடியாக ஸ்டாலினிடம் அந்த தகவல்களை இளங்கோவன் எடுத்துரைத்துள்ளார். மேலும் அதன் பிறகும் அழகிரி – இளங்கோவன் இடையே செல்போன் உரையாடல் நடந்துள்ளது.

மேலும் அழகிரி கூறிய விஷயத்திற்கு ஆதரவாக இளங்கோவன் ஸ்டாலினிடமே பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் இளங்கோவன் மீது ஸ்டாலினுக்கே எரிச்சல் ஏற்பட்டதாகவும், இந்த நிலையில் கலைஞர் சிலை திறப்பிற்கு அ.தி.மு.கவிற்கு அழைப்பு இல்லை என்று இளங்கோவன் பேசியதால் அதனை பயன்படுத்தி பதவியை பறித்துள்ளது தி.மு.க என்கிறார்கள். இந்த நிலையில், தான் ஸ்ட்ரெய்ட் பார்வேர்டாக இருந்ததற்கு கிடைத்த பரிசு என்று இளங்கோவன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம். 

click me!