மீண்டும் தமிழகத்தில் 3-வது அணி..! தினகரன் – கமலை இணைக்க தீவிர முயற்சி!

By Selva KathirFirst Published Feb 24, 2019, 11:52 AM IST
Highlights

தனித்து போட்டி என்று அறிவித்து வரும் தினகரனை கமலுடன் இணைக்க பாரிவேந்தர் முயற்சிப்பதாக கூறுகிறார்கள். தினகரனை பொறுத்தவரை கமலுடன் இணைய எந்த தயக்கமும் இல்லை. கமல் கடந்த ஆண்டு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திற்கு தங்கதமிழ் செல்வனை அனுப்பி நட்புக்கரம் நீட்டியிருந்தார் தினகரன். அந்த வகையில் கமலுடன் கூட்டணிக்கு தினகரன் தயாராகவே உள்ளார்.

தி.மு.க – அ.தி.மு.க கூட்டணிக்கு மாற்றாக 3-வது கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

கமலின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அமமுக, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட சில உதிரி கட்சிகள் தற்போது வரை நாடாளுமன்ற தேர்தலில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றன. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று கமல் அறிவித்தாலும் கூட போட்டியிட 40 பேர் அந்த கட்சியில் இல்லை என்பது தான் நிதர்சமான உண்மை. இதே போல் தனித்து களம் இறங்கினால் ஒன்றில் கூட வெல்ல முடியாது என்பது தினகரனுக்கும் தெரியும். 

இந்த நிலையில் தான் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கமல் – பாரிவேந்தர் சந்திப்பு நடைபெற்றது. தி.மு.கவை நம்பி ஏமாந்து போன கமலும் பா.ஜ.கவை நம்பி ஏமாந்து போன பாரிவேந்தரும் தான் 3வது அணிக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக கமல் பாரிவேந்தர் போட்டியிடும் தொகுதியில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்ய ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கலாம் என பாரிவேந்தர் கமலுக்கு யோசனை கூறியுள்ளார். 

மேலும் ஒரு சில கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வந்துவிட்டால் தி.மு.க – அ.தி.மு.கவுடன் தொகுதி உடன்பாட்டில் இழுபறி செய்து வரும் கட்சிகளும் நம்முடன் வந்துவிடும் என்று கமலுக்கு பாரிவேந்தர் நம்பிக்கை கூறியுள்ளார். இந்த யோசனை சிறப்பானதாக கமலுக்கு தெரிந்துவிட தி.மு.க கூட்டணியில் தொகுதிக்காக நடையாய் நடந்து கொண்டிருக்கும் கட்சிகளை கூட்டணி குறித்து பேச கமல் – பாரிவேந்தர் தரப்பு அணுகுவதாக கூறப்படுகிறது. ஆனால் தி.மு.க கூட்டணியில் முடிவு தெரியாமல் மீண்டும் 3வது அணி என்கிற தற்கொலை முடிவுக்கு இறங்க அந்த கட்சிகள் தயாராக இல்லை.

 

இந்த நிலையில் தான் சென்னையில் பேசிய கமல், மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறியுள்ளார். இதுநாள் வரை தனித்து போட்டி என்று கூறி வந்த கமல் திடீரென கூட்டணி என்று கூறுவதற்கு காரணம் 3வது அணி தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தேர்தலை புறக்கணிப்பதை விட 3வது அணியில் இணைந்து போட்டியிட்டால் விளம்பரம் கிடைக்கும் என்று சில கட்சிகள் கமல் – பாரிவேந்தரை அணுகவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தில் 3வது அணிக்கான வாய்ப்பு உருவாகும் என்கிறார்கள்.

 

இதில் உச்சகட்டமாக தனித்து போட்டி என்று அறிவித்து வரும் தினகரனை கமலுடன் இணைக்க பாரிவேந்தர் முயற்சிப்பதாக கூறுகிறார்கள். தினகரனை பொறுத்தவரை கமலுடன் இணைய எந்த தயக்கமும் இல்லை. கமல் கடந்த ஆண்டு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திற்கு தங்கதமிழ் செல்வனை அனுப்பி நட்புக்கரம் நீட்டியிருந்தார் தினகரன். அந்த வகையில் கமலுடன் கூட்டணிக்கு தினகரன் தயாராகவே உள்ளார்.

ஆனால் கமல் தான் சசிகலாவிற்கு எதிரான மனநிலை கொண்டவர். எனவே கமலை சமாதானம் செய்து தினகரனுடன் கூட்டணி வைக்க பாரிவேந்தர் ஏற்பாடு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இதுநாள் வரை டல்லாக இருந்த தினகரன் கேம்ப் இன்று முதல் உற்சாகமாக பேச ஆரம்பித்துள்ளது.

click me!