lockup death: முதுகுளத்தூரில் சட்ட ஒழுங்கு பாதிக்கும்.. டிஜிபிக்கு பார்வார்டு பிளாக் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Dec 7, 2021, 1:37 PM IST
Highlights

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளர், காவல் நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்குதலை நடத்தி ஆறு மணி நேரம் கழித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்து அழைத்துச் செல்ல கூறியிருக்கிறார்கள். உடல் சோர்வாக காணப்பட்ட மணிகண்டனை பெற்றோர் ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

மாணவர் மணிகண்டன் மரணத்தில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தலையிட வேண்டும், இல்லையென்றால் முதுகுளத்தூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி எச்சரித்துள்ளது. மாணவனின் மரணத்திற்கு நீதி கிடைக்கச் செய்வதுடன் உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் காவல் நிலையத்தில் நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் 6 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்ட நிலையில் வீட்டில்  ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணையின் போது அடித்து துன்புறுத்தியதால்தான் மகன் இறந்தான் என அவரது பெற்றோர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் உடன் 1 கோடி ரூபாய் நிவாரண வழங்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 7 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாணவனின் இந்த மரணம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவரின் மரணம் குறித்து பலரும் பல வகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தில் மாணவர் மரணத்திற்கு காரணமாக சொல்லப்படும் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும்,  திமுக அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றும் இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுக்கு பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 

தமிழகத்தின் பொதுமக்கள் சட்ட திட்டங்கள் அனைத்தையும் காவல் அரசராக கட்டிக்காத்து வரும் உயர் திரு. டிஜிபி அவர்களுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக வேண்டுகோள் என்னவென்றால்,  கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனையின்போது ஒத்துழைப்பு தராமல் சென்றதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லெ. மணிகண்டன் என்ற மாணவன் விசாரணை என்கிற பெயரில் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிய உடனே ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையாக இருக்கிறது. மணிகண்டன் என்கிற மாணவன் இதுவரை எந்த குற்ற பின்னணி இல்லாமல், கமுதியில் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் நபர். அதுபோக தங்களைப் போல் நல்ல காவல்துறை உயர் அதிகாரியாக தானும் வரவேண்டும் என ஆசைப்பட்டு, தற்போது நடைபெற்ற காவல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற காவலர், பணிக்கு செல்லும் கனவோடு இருந்த நபர்.

இவர் தனது பிறந்தநாளன்று முதுகுளத்தூர் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, வழியில் பார்த்த உள்ளூர் நபருக்கு உதவிக்காக லிப்ட் கொடுத்து வந்துள்ளார். காவலர்கள் சோதனையில் இந்த போது பின்னால் இருந்த நபர் தப்பி ஓடியதால் இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளர், காவல் நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்குதலை நடத்தி ஆறு மணி நேரம் கழித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்து அழைத்துச் செல்ல கூறியிருக்கிறார்கள். உடல் சோர்வாக காணப்பட்ட மணிகண்டனை பெற்றோர் ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். வீட்டிற்கு சென்றது முதல் ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்த மணிகண்டன் சிறிது நேரத்திலேயே இறந்து விட்டார். எந்த நோய் நொடியும் இல்லாதவன் காவலர் பணிக்கான உடல் தகுதியோடு இருந்த மாணவனை கீழத்தூவல் காவல் ஆய்வாளர் கொடூரமான முறையில் தாக்கியது தான் அவரது மரணத்திற்கு காரணம் என அனைவருக்கும் நன்றாக தெரிகிறது. இந்த விஷயத்தில் காவல் அரசரான நீங்கள் நேரடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி மாணவன் மணிகண்டன் மரணத்திற்கு நீதி கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சம்பவத்தால் முதுகுளத்தூர் பகுதியில் பெரிதும் சட்டம்-ஒழுங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நீங்களே நேரடியாக விசாரித்து மாணவனின் மரணத்திற்கு நீதியும் உரிய நிவாரணமும் பெற்றுத்தந்து சட்டம் ஒழுங்கு சீர் கெடாமல் மக்கள் மத்தியில் காவல்துறை மீது தற்போது ஏற்பட்டிருக்கும் பகை உணர்வை மாற்றும் வகையில் நல்ல ஒரு முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில தலைவர் முத்துராமலிங்கம் சார்பில் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

click me!