உள்ளாட்சி தேர்தல்... அதிமுகவிடம் ஆட்டத்தை ஆரம்பித்த பாமக... அறிவிப்புக்கு முன்பே அதகளம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 13, 2019, 11:27 AM IST
Highlights

வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.விடம் கூடுதலான இடங்களை கேட்டுபெறுவோம் என்று அந்தக் கூட்டணியில் உள்ள பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
 


கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது பேசிய அவர், ‘’எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகிறது. உள்ளாட்சியில் போட்டியிட பா.ம.க. கூடுதலான இடங்களையும், உரிமைகளை கேட்டு பெறுவோம்.

இந்தத் தேர்தலில் நாம் பெரிய வெற்றிபெற வேண்டும். அ.தி.மு.க. கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பா.ம.க. போட்டியிடும் இடங்களிலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில், பா.ம.க.வினர் கட்டுப்பாட்டுடன் வேலைசெய்ய வேண்டும். கட்சிக்கு எதிராக செயல்பட்டால், எந்த பொறுப்பில் இருந்தாலும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். காலநிலை மாற்றங்கள் காரணங்களால், வறட்சி, வெள்ள சேதங்களை சந்தித்து வருகிறோம். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வில் உள்ளாட்சி அமைப்புகளும் ஈடுபட வேண்டும் என பசுமைத்தாயகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். காவிரி உபரிநீரை கடலில் கலக்காமல் தடுக்க, அதனை முழுமையாக பாசனத்திற்கும், குடிநீருக்கும், தொழில் வளர்ச்சிக்கும் பயன்படுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என அவர் தெரிவித்தார்.
 

click me!