உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியல்..! கூட்டணி கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த அதிமுக..!

By Selva KathirFirst Published Dec 14, 2019, 10:24 AM IST
Highlights

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி குழு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட அனுமதிக்கப்படுவர். இந்த உறுப்பினர்கள் தான் ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களை மறைமுக தேர்தலின் மூலமாக தேர்வு செய்வர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை முதல் ஆளாக வெளியிட்டு தேர்தல் சூட்டை தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக.

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி குழு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட அனுமதிக்கப்படுவர். இந்த உறுப்பினர்கள் தான் ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களை மறைமுக தேர்தலின் மூலமாக தேர்வு செய்வர்.

அந்த வகையில் தேனி, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களுக்கான ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட வாரியாக வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக – அதிமுக இடையிலான இடப்பகிர்வு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இதனால் திண்டுக்கல்லில் பாஜக தனித்து போட்டி என அந்த மாவட்ட நிர்வாகிகள் அறிவித்தனர். ஆனால் இதைப் பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் வேட்பாளர் தேர்வில் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு எத்தனை ஒன்றியக்குழு உறுப்பினர்கள், எத்தனை மாவட்ட குழு உறுப்பினர்கள் என்பதை அதிமுக தலைமை இறுதி செய்து மாவட்டச் செயலாளர்களக்கு தெரிவித்துவிட்டதாக கூறுகிறார்கள். அதனை கூட்டணி கட்சிகள் ஏற்கவில்லை என்றால் அந்த இடத்திற்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் மற்றவற்றுக்கு வேட்பாளரை அதிமுக அறிவித்து வருகிறது.

ஜெயலலிதா இருக்கும் போது தான் இது போன்று கூட்டணி கட்சிகளை அதிமுக எதிர்கொள்ளும். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இழுபறியில் இருந்தது. அப்போது திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர வைத்தது அதிமுக. அதே போல் தற்போதும் இடப்பகிர்வு குறித்து சில மாவட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மற்ற இடங்களில் வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்திருப்பது கூட்டணி கட்சியினருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவலாகியுள்ளது.

click me!