இரட்டை இலக்க தொகுதிகளுக்கு ஸ்கெட்ச் போடும் L.K.சுதீஷ்… மவுசு குறையாமல் மாஸ் காட்டும் தேமுதிக!!

By sathish kFirst Published Feb 12, 2019, 7:18 PM IST
Highlights

பிஜேபி அதிமுக உட்பட கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இரண்டு வாரத்தில் தலைவர் விஜயகாந்த் நாடு திரும்பவுள்ளார். அதன் பின் அவரிடம் எங்கள் அறிக்கையை சமர்பிப்போம். பிப்ரவரி இறுதிக்குள் கூட்டணி உறுதி செய்யப்படும்.’ என சென்னை கோயம்பேட்டில் தேமுதிக., கட்சி நிகழ்ச்சிக்குப்பின் அதில் அக்கட்சி துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்னும் சில நாட்களில் சென்னை திரும்புகிறார். விஜயகாந்த் உடல் நலம் தேறி பழையகேப்டனாக அரசியலில் மீண்டும் வலம் வருவார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு என அனைத்து கட்சிகளும் பிஸியாக உள்ளன.

தேமுதிக சார்பில், கூட்டணி பேச்சு நடத்துவதற்கு, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. எல்.கே. சுதீஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள் டாக்டர் இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, திருப்பூர் அக்பர் ஆகியோர் குழுவில் இடம் பெற்று உள்ளனர். சுதீஷ் கூட்டணி பேச்சு தொடர்பான சந்திப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதிமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், தேமுதிக தரப்பில், 10 தொகுதிகளை (கள்ளக்குறிச்சி, திருப்பூர், மதுரை, சேலம், திண்டுக்கல், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி) கேட்டுள்ளதாம். ஆனால், அ.தி.மு.க., தரப்பில், 6, ‘சீட்’ வரை ஒதுக்குவதாக சொல்வதால் நான்கு தொகுதிகளால் கூட்டணி முடிவாவதில் இழுபறி நீடித்து வருகிறது.

அதேபோல, டிடிவி தினகரனும் தேமுதிகவோடு கூட்டணி அமைத்துவிட வேண்டும் என தூது விட்டு வருகிறாராம், தேமுதிக தொண்டர்கள் தேர்தல் வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய்வார் என்பது தினகரனுக்கு தெரியும் என்பதாலும், தமிழகம் முழுவதும் விஜயகாந்த்துக்கு கணிசமான வாக்கு வாங்கி இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் என்பது தினகரனின் கணக்கு. தினகரனின் தொடர் முயற்சியையும் அமெரிக்காவிலுள்ள கேப்டனிடம் பரிசீலனை செய்து வருகிறாராம் எல்.கே.சுதீஷ்.

இரண்டு தரப்பிலும், ரகசிய பேச்சு தொடர்கிறது. தேமுதிக வைக்கும் கோரிக்கைகளை கூட்டணியை இறுதி செய்ய முடியாமல், அதிமுக தலைமை திணறி வருகிறது. காரணம் என்னதான் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் இன்னும் அதே மவுஸோடு தான் தேமுதிக இருக்கிறது.

கடந்த 2011 தேமுதிக அதிமுகவின் பிரமாண்ட வெற்றியை மனதில் வைத்தே இந்த கூட்டணி தொடரும் என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எப்படியும் கோரிக்கையை ஏற்று கூட்டணியை இறுதி செய்யும் முடிவில் இருக்கிறதாம் அதிமுக.

இந்நிலையில், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து, இன்னும் சில நாட்களில், சென்னை திரும்புவார் எனவும், அப்போது, கூட்டணி முடிவை, அவருடன் கலந்தாலோசித்து, அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார் எல்.கே.சுதீஷ்.

click me!