மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம்... எடியூரப்பா ஆணவப்பேச்சு...!! கொதித் தெழுந்து தீர்மானம் போட்ட மதிமுக.

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2020, 11:26 AM IST
Highlights

கர்நாடகத்தில் பா.ஜ.க. அரசு இருப்பதால், மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு ஒப்புதல் வழங்கிவிடும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருதுகிறார். 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் 01.10.2020 அன்று காலை, கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன அதன் விவரம் பின்வருமாறு:- 

மத்திய பா.ஜ.க. அரசு, செப்டம்பர் 18, 2020 அன்று மக்களவையிலும், செப்டம்பர் 20 இல் மாநிலங்களவையிலும் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றி உள்ள மூன்று சட்டத் திருத்தங்கள் வேளாண் தொழிலையே முழுமையாகச் சீரழித்து, விவசாயிகள் வாழ்வையே சூறையாடும் ஆபத்தை உருவாக்கி இருக்கிறது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் - 2020, விவசாய விளைபொருட்கள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்டம் - 2020 விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் - 2020 ஆகிய மூன்று சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்தியாவில் விவசாயிகளை ஒட்டுமொத்தமாக நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, நிலம், வேளாண்மை, வேளாண் விளை பொருள், வணிகம் மூன்றையும் பன்னாட்டு மற்றும் இந்தியாவின் உள்நாட்டுப் பெரு நிறுவனங்களிடம் ஒப்டைக்கும் விதத்தில் மேற்கண்ட மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. 

வேளாண்மைதான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறது. அதனை உடைத்து எறிய முனைந்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை முறியடிக்க விவசாயிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு அறப்போராட்டத்தைச் சந்திக்கத் தயாராக வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. அறைகூவல் விடுக்கிறது எனவும், 

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை ரூ.9 ஆயிரம் கோடியில் செயல்படுத்த கர்நாடக பா.ஜ.க. அரசு தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வருகிறது. இத்திட்டம் குறித்து செப்டம்பர் 11, 2020 இல் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோல் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி மேகேதாட்டு அணை கட்டும் திட்ட அறிக்கை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தத் திட்ட அறிக்கை மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுவிடுவோம் என்று தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து செப்டம்பர 22 ஆம் தேதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மைசூரில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், தமிழக எல்லைக்கு முந்தைய மேகேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும். இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடமிருந்து விரைவில் பெற்றுவிடுவோம். கர்நாடகத்தின் பாசனப் பரப்பைப் பெருக்குவதுதான் தமது அரசின் இலட்சியம் என்று அறிவித்து இருக்கிறார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு, மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து இருப்பதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. கண்டனம் தெரிவிக்கிறது. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் கிடைப்பது கானல் நீராகப் போய்விடும். கர்நாடகத்தில் பா.ஜ.க. அரசு இருப்பதால், மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு ஒப்புதல் வழங்கிவிடும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருதுகிறார். மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்பதை மத்திய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. 

என முக்கிய தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்திய கலாச்சாரத்தை தொகுக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களின் சார்பில் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் வேறொரு குழுவை அமைக்க வேண்டும்,  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எடப்பாடி பழனிச்சாமி அரசு முற்றாக நிராகரிக்க வேண்டும்.  நீட் தேர்வை ரத்து செய்திட மத்திய அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து வெற்றி கிட்டும் வரை போராட வேண்டும், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை -2020 திருத்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டிற்கு முற்றிலும் பேராபத்து விளைவிக்கும். இதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைத் திட்டவட்டமாக தெரிவித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 

click me!