
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வாகனத்தை சூழ்ந்து நின்று முழக்கம் எழுப்பியதால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக ஜெயக்குமாருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டும் அவரது வாகனத்தை தாக்கியும் வந்த நிலையில் இன்று இச்சம்பவம் நடந்துள்ளது.
அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் இயங்கு வருகிறது. இதுவரை இரட்டை தலைமையின் கீழ் அக் கட்சி சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. எனவே கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் ஒற்றைத் தலைமையில் கீழ் கட்சி வரவேண்டும் என்ற முழக்கம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து எழுந்துள்ளது. இது ஓபன்னீர் செல்வம் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சியை முறியடிப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார், நேற்று முன்தினம் செய்தியாளரை சந்தித்து அவர் ஒற்றைத் தலைமையை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, இரட்டை தலைமையின் கீழ் கட்சி நன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒற்றைத் தலைமை எனக் கூறி என்னை தொண்டர்கள் மத்தியில் இருந்து ஓரம்கட்ட முடியாது என வெளிப்படையாக பேசினார்.
மேலும் ஒற்றை தலைமை என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் தொடங்கிவைத்தார். அதிலிருந்து தான் இந்த பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக இருந்து வரும் ஜெயக்குமார் ஆலோசனைக்காக அதிமுக அலுவலகம் வரும்போதெல்லாம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக தகாத வார்த்தைகளில் பேசி எச்சரித்தும் வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரது வாகனத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கினர், அதேபோல இன்று காலை அவர் அலுவலகத்திற்குள் நுழையும்போதே அவருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அதிமுக அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓபிஎஸ் காரை ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் சுற்றுப் போட்டனர். " இப்போ வா பாக்கலாம் என அங்கிருந்தவர்கள் ஓபிஎஸ்சுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதனால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது, அங்கு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 200க்கும் அதிகமான தொண்டர்கள் குவிந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சீண்டி வந்த நிலையில் இன்று அவரும் தனது ஆதரவாளர்களை களத்தில் இறக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.