
2017ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை இன்று தொடங்கி நடந்து வருகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையின் முதல் நாளிலேயே திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், கவர்னர் உரையை தொடர்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்துக்கான ஒப்புதல்பெறும் சட்ட முன் வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அந்த அவசர சட்டத்தில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பது தெரியவரும். இந்த சட்ட முன் வடிவு மீது பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கும் விவாதம் நடைபெறும்.
இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிப்பதற்காக ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அதற்கான சட்ட முன் வடிவு உள்பட பல முக்கிய சட்ட முன் வடிவுகள் தாக்கல் செய்யப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.