மீண்டும் ஓமாந்தூரார் வளாகத்தில் சட்டப்பேரவை...? அதிரடியாக அரங்கேறும் காட்சிகள்..!

By Asianet Tamil  |  First Published Sep 15, 2021, 10:08 PM IST

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பழைய கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டிருப்பதால், சட்டப்பேரவை மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 


2006 - 2011-ஆம் ஆண்டு கால கட்டத்தில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயகலத்தைப் பார்த்து பார்த்து கட்டினார். புதிய தலைமை செயலகத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். புதிய தலைமை செயலகத்தில் 2010-11-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரும் நடைபெற்றது. 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் செயல்படும் என்று அறிவித்தார்.
மேலும் புதிய தலைமைச் செயலகத்தை அரசு பன்னோக்கு மருத்துவமனையாகவும் ஜெயலலிதா மாற்றினார். இதனையடுத்து இக்கட்டிம் மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. புதிய தலைமைச் செயலகம் திறக்கப்பட்டபோது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயர்கள் பொரித்து கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு அந்தக் கல்வெட்டு அகற்றப்பட்டது. அரசு பன்னோக்கு மருத்துவமனையைக் காணொலியில் திறந்து வைத்த ஜெயலலிதாவின் கல்வெட்டு மட்டும் வைக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில்தான் தற்போது ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மன்மோகன் சிங்,   கருணாநிதி, சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்ற திறப்புவிழா கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு  சட்டப்பேரவையை மாற்ற வேண்டும் என்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.க்கள் பலர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தற்போது பழைய கல்வெட்டு அங்கு வைக்கப்பட்டிருப்பதன் மூலம் மருத்துவமனை கட்டிடம் மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்படுமா என்ற கேள்விகள் வேகம் பிடித்துள்ளன. 

click me!