பாஜகவை எதிர்த்து போட்டியிடுங்க... வயநாட்டில் ராகுல் போட்டியால் இடதுசாரிகள் கொந்தளிப்பு!

By Asianet TamilFirst Published Apr 1, 2019, 7:02 AM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது இடதுசாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி வழக்கமாகப் போட்டியிடும் உ.பி.யில் உள்ள அமேதி தொகுதியில் களமிறங்கி உள்ளார். அதே நேரத்தில் தற்போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமேதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், அவர் தென்னிந்தியாவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தோல்வி பயம் காரணமாக ராகுல் தென்னிந்தியாவில்  போட்டியிடுவதாக பாஜக கிண்டல் செய்துவருகிறது.


இந்நிலையில் ராகுல் வயநாட்டில் களமிறங்க உள்ளது இடதுசாரிகளுக்குக் கோபத்தைத் தூண்டியுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் தன் பிடியை இழந்துவிட்ட இடதுசாரிகள், இந்த முறை கேரளாவை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கிறார்கள். மேலும் ஐயப்பன் கோயில் விவகாரத்தை வைத்து பாஜகவும் கேரளாவில் காலூன்ற தீவிரமாக முயற்சி செய்துவருகிறது. கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிகளும்தான் பிரதான கட்சிகள் என்றாலும், பாஜகவை முறியடிக்கும் வேலையில் இடதுசாரிகள் மும்மரம் காட்டிவருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ராகுல் போட்டியால் கேரளாவில் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் இடதுசாரிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.


ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் காங்கிரஸும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடும் அளவுக்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், கடைசியில் கூட்டணி அமையவில்லை. இரு கட்சிகளுக்கும் புரிதல் உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுவருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராகுல் இடதுசாரிகள் ஆளும் மாநிலத்தில் போட்டியிட இருப்பது அக்கட்சி தேசிய தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டிய சூழலில் இரு கட்சிகளும் உள்ள நிலையில், ராகுல் போட்டியால் அக்கட்சிகளே ஒருவரையொருவர் தேசிய அளவில் கடுமையாக எதிர்க்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுபற்றி தனது ஆதங்கத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளிப்படுத்திவிட்டார்.
“பாஜவுக்கு எதிராகத்தான் போர் என ராகுல் நினைத்திருந்தால், அந்தக் கட்சி ஆட்சி உள்ள மாநிலத்தில் அவர் போட்டியிட்டிருக்கலாம். தற்போது கேரளாவில் நிற்பதன் மூலம் எங்களுக்கு எதிராக ராகுல் களமிறங்கி உள்ளதாகவே நினைக்கிறோம். இதனால் பயந்துவிட மாட்டோம். இங்குள்ள 20 தொகுதிகளில் எங்கள் கூட்டணிக்கு எதிரான ஒரு வேட்பாளராகவே அவர் இருப்பார்; வயநாட்டில் அவர் தோற்பார்” என்று தெரிவித்துள்ளார். 
இதேபோல இடதுசாரிகளின் தேசிய தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், டி. ராஜா உள்ளிட்டவர்களும் ராகுல் கேரளாவில் களமிறங்குவதைக் குறை கூறி உள்ளார்கள். 

click me!