திமுக தலைவரின் திண்ணைப் பிரச்சாரம் … ஸ்டாலினிடம் புலம்பிய கிராம பெண்கள் !!

By Selvanayagam PFirst Published Mar 31, 2019, 10:29 PM IST
Highlights

ஓசூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பின், குமுதபள்ளி என்ற கிராமம் அருகே திரளான பெண்களும் சிறுவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரிடம் கிரா பெண்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

ஓசூரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், குமுதபள்ளி என்ற கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பெண்களும், குழந்தைகளும் அவரை வழி மறித்து வரவேற்பு அளித்தனர்.

இதை பார்த்த ஸ்டாலின், கிராமத்திற்குள் சென்று வீடு ஒன்றின் திண்ணையில் அமர்ந்து  பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது கேஸ் விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு ஆகியவற்றை சுட்டிக்காட்டி தங்களின் வேதனைகளை பெண்கள் எடுத்துரைத்தனர். 

அனைத்தையும் கேட்டுக்கொண்ட ஸ்டாலின்  மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நம்முடைய ஆட்சி அமையும் போது உங்களின் குறைகள் அனைத்தும் களையப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மக்களும் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து கிருஷ்ணகிரியில் தங்கிய ஸ்டாலின் காலையில் நடைப்பயிற்சி செய்து  பொது மக்களை சந்தித்தார். கிருஷ்ணகிரி நகரில் உள்ள உழவர் சந்தை, கடை வீதிப் பகுதிகளுக்கு நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். 

உழவர் சந்தைக்குள் சென்ற ஸ்டாலின் அங்கிருந்த வியாபாரிகளிடம் கைகுலுக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கிருந்த தேநீர்க்கடைக்கு சென்ற ஸ்டாலின் வெளியிலிருந்த இருக்கையில் அமர்ந்து குழந்தைகளுடனும், பொதுமக்களுடனும் பேசிக்கொண்டே தேநீர் குடித்தார்.

இளைஞர்கள் பலர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகேயுள்ள ஆனந்த் தியேட்டர் சாலை, ஸ்டேட் பாங்க் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த ஸ்டைல் பொது மக்களிடம் மிக நன்றாக எடுபடுகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் ஸ்டாலின் கவர்ந்து வருகிறார்.

click me!