
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களத்தில் இறங்கி வேலை செய்த நடிகர் லாரன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் லாரன்ஸும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சென்னை மெரினா கடற்கடையில் ராவும் பகலும் பாராமல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் ஒற்றுமையுடனும் மன உறுதியுடனும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில் எடுத்த போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என தன் முழு ஆதரவையும் லாரன்ஸ் தெரிவித்தார்.
மேலும் மெரீனா கடற்கரையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உணவுகளையும் தண்ணீரையும் வழங்கி போராட்டக்காரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார் லாரன்ஸ்.
இதையடுத்து அச்சமத்தில் மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் ‘ஜல்லிக்கட்டு ஹீரோ’ லாரன்ஸ் என்ற நற்பெயரையும் வாங்கினார்.
இதனிடையே அந்த போராட்டம் வெற்றி பெற முதலமைச்சர் ஓ.பி.எஸ் மத்திய அரசை சந்தித்து அவசர சட்டம் பிரபித்து, அதை நிரந்தர சட்டமாகவும் மாற்றி தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்த வழிவகை செய்தார்.
இதனால் பொதுமக்களிடையே முதலமைச்சர் ஓ.பி.எஸ் ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்ற புனைப்பெயரை பெற்றார்.
இந்நிலையில் தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு நடிகர் லாரன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது அதிமுகவினரிடையே குதூகுலத்தை ஏற்படுத்தியுள்ளது.