நெருக்கும் நில மோசடி வழக்கு..! பதற்றத்தில் சைதாப்பேட்டை திமுக... அதிமுகவுக்கு கைகொடுக்குமா?

By Selva KathirFirst Published Mar 30, 2021, 10:35 AM IST
Highlights

சென்னை சைதாப்பேட்டையில் திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள மா.சுப்ரமணியன் வெற்றி பெற்றால் மிக குறுகிய காலத்தில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்று தொகுதி முழுவதும் பேச்சு அடிபடுகிறது.

சென்னை சைதாப்பேட்டையில் திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள மா.சுப்ரமணியன் வெற்றி பெற்றால் மிக குறுகிய காலத்தில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்று தொகுதி முழுவதும் பேச்சு அடிபடுகிறது.

தற்போது சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏவாக உள்ள மா.சுப்ரமணியம் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சென்னை மேயராக இருந்தார். அப்போது சிட்கோவில் தொழிலாளர்களுக்கு என்று நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து. அந்த வகையில் ஒதுக்கப்பட்ட ஒரு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனா பெயருக்கு அப்போது மேயராக இருந்த மா.சுப்ரமணியம் மாற்றி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தன் மீதான நில அபரிப்பு வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மா.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தார். ஆனால் நில மோசடி புகாரில் முகாந்திரம் இருப்பதால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை மா.சுப்ரமணியம் சந்திக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இதே போல் இந்த சிட்கோ நில மோசடி வழக்கில் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்கிற அச்சம் மா.சுப்ரமணியத்திற்கு இருந்தது. இதனை அடுத்து இந்த வழக்கில் தனக்கும் தனது மனைவிக்கும் முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார் மா.சுப்ரமணியம்.

இதனை ஏற்று மா.சுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி காஞ்சனாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தது. இதன்படி தற்போது முன்ஜாமீனில் தான் மா.சுப்ரமணியம் திமுக வேட்பாளராக சைதாப்பேட்டை தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சைதாப்பேட்டை தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள மா.சுப்ரமணியம் மறுபடியும் எம்எல்ஏ ஆகிவிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக இரவு பகலாக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ள சைதை துரைசாமி அதிரடியாக மாசுப்ரமணியத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.

அதன்படி மா.சுப்ரமணியம் மீதான நில மோசடி வழக்கு தொடர்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து மக்களிடத்தில் எடுத்துக்கூற உள்ளதாக அந்த நோட்டீசில் சைதை துரைசாமி கூறியிருந்தார். அதாவது மா.சுப்ரமணியம் மீதான நில மோசடி புகாரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த உள்ளதாக மா.சுப்ரமணியத்திற்கே வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் சைதை துரைசாமி. அதற்கு உரிய ஆதாரங்கள் இருந்தால் பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் என்று மா.சுப்ரமணியமும் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பியுள்ளார். இதன் மூலம் தன் மீதான நில மோசடி வழக்கு விசாரணையில் உள்ளதை மா.சுப்ரமணியம் ஒப்புக்  கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மா.சு மீதான நில மோசடி வழக்கு விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் இறுதி கட்ட விசாரணையும் தொடங்கி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை மா.சுப்ரமணியத்திற்கு எதிராக இந்த வழக்கில் தீர்ப்பு வரும் பட்சத்தில், அவர் எம்எல்ஏ பதவியை இழக்க நேரிடும். அப்படி எம்எல்ஏ பதவியை மா.சுப்ரமணியம் இழக்கும் பட்சத்தில் சைதாப்பேட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்கிறார்கள். இதை மையப்படுத்தி தொகுதியில் பிரச்சாரம் நடைபெறுவது மா.சு தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

click me!