நம்பி நம்பி ஏமாந்தது போதும்.. எனக்கு யாருமே நம்பிக்கையாக இல்லையே.. புலம்பிய ஜெயலலிதா..!

By vinoth kumarFirst Published Jun 22, 2021, 11:15 AM IST
Highlights

யாரோ ஒருவர் வாங்கி கொடுத்ததாக நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். கட்சிக்கு உதவி செய்யாமல், தனக்கு பதவி வாங்கித்தந்ததாக நினைப்பவர்களுக்கு கொட்டிக் கொடுக்கிறார்கள். கடைசிவரை நான்தான் பதவி வழங்கினேன் என்று அவர்கள் நினைக்காததுதான் வேதனை என்றுச் சொன்னார். 

அம்மாவால் தான் உங்களுக்கு பதவி கிடைத்தது, உங்களுக்கு பதவி கிடைத்த விதம் இப்படித்தான் என்று உண்மையைச் சொன்னால், ஓ அப்படியா! என்பார்கள். ஆனால் அதை அவர்கள் நம்புவதில்லை என்பதை சில நிகழ்வுகளின் மூலம் உணர்ந்தேன் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் அவரது முகநூல் பக்கத்தில்;- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில், 2016 சட்டமன்றப் பேரவை தேர்தலுக்கான நேர்காணல் நடக்க ஆரம்பித்தது. அம்மா அவர்கள் முதலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை நேர்காணலுக்கு வரச் சொன்னார்கள். முதல் நாள் நேர்காணலில் கன்னியாகுமரி மாவட்டத்தையே முடிக்கமுடியவில்லை. அடுத்த நாளும் தொடர்ந்தது. குறைந்த நபர்களையே அம்மா அவர்களால் பார்க்க முடிந்தது. அதற்குமேல் அவர்களால் முடியவில்லை. 

சந்தேகம் வரும்போது என்னை விசாரித்துச் சொல்லச் சொன்னார்கள். இது என்ன வம்பா போச்சே! என்று நினைத்த நான் விசாரித்து இரண்டு நாள் சொன்னேன். சரியாக சொல்லவேண்டும் என்று நான் நினைத்ததால் குழப்பம் தான் ஏற்பட்டது. முடிவில் மூன்றாம் நாள் அம்மா அவர்களிடம் ஒருவர் குறித்து விசாரித்து சொன்னபோது, இல்லை இவர்தான் சரியாகாத் தெரிகிறார் என்றார். உடனே இந்த அரசியலில் இருந்து தப்பிக்க நினைத்த நான், விசாரிக்கும் போது மாற்றி மாறிச் சொல்கிறார்கள். கடைசியில் நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கிறது அம்மா என்றேன். தப்பிக்க நான் நினைக்கிறன் என்று நினைத்தாரோ என்னவோ! அம்மா சிரித்தே விட்டார். அம்மா அவர்கள் சிரமப்படுவதை உணர்ந்த நான், அம்மாவிடம் கண்ணீரோடு நம்பிக்கைக்கு உரிய ஒரு நிர்வாகியை வைத்து விசாரித்து செய்வது நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன். 

அதற்கு அம்மா அவர்கள் நம்பி நம்பி ஏமாந்துதான் மிச்சம். யாருமே எனக்கு நம்பிக்கையாக இல்லையே. நான் என்ன செய்வது... எனவே, இந்த முறை நானே பார்த்துதான் முடிவெடுக்கப் போகிறேன் என்றார்.  ஒருவர் குறித்து, நான் இவர் வெற்றிபெறுவார் என்றுச் சொன்ன போது, அவரை அம்மா அவர்கள் ஏற்கவில்லை. திறமையானவர் என்றேன். ஆனால், அம்மா அவருக்கு வாய்ப்பு வழங்க விரும்பவில்லை என்பதை உணர்ந்து அமைதியாகிப்போனேன். நான் யோசிப்பதை உணர்ந்த அம்மா, நான் தான் அறிவிக்கிறேன், நான் தான் பதவி கொடுக்கிறேன். ஆனால், என்னால் பதவி கிடைத்தவர்கள் நான் கொடுத்ததாக நினைக்கவில்லை. யாரோ ஒருவர் வாங்கி கொடுத்ததாக நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். கட்சிக்கு உதவி செய்யாமல், தனக்கு பதவி வாங்கித்தந்ததாக நினைப்பவர்களுக்கு கொட்டிக் கொடுக்கிறார்கள். கடைசிவரை நான்தான் பதவி வழங்கினேன் என்று அவர்கள் நினைக்காததுதான் வேதனை என்றுச் சொன்னார். அன்று நேரில் பார்த்து முடிவெடுத்ததால்தான் என்னவோ இந்த ஆட்சி இறுதிவரை நின்றது. யாரும் எந்த நிர்வாகியின் பின்னாலும் செல்லவில்லை. அது உங்களுக்கும் தெரியும். 

நான், திறமையானவர் என்று அம்மாவிடம் சொன்னவர் இந்த முறை வெற்றி பெற்றிருக்கிறார். அம்மா திறமைக்கு என்றுமே முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அம்மாவை பொறுத்தவரை வெற்றி முக்கியமில்லை, ஒழுக்கமே முக்கியம். உண்மைக்கும், விசுவாசத்திற்கும், பண்புகளுக்கு மட்டுமே வாய்ப்புத் தந்தார்கள். அதிகம் படிக்காதவர்களுக்குக்கூட முக்கிய பதவி கொடுத்தது கூட விசுவாசத்திற்குத்தான், அவர்களின் உழைப்புக்குத்தான். கண்டிப்பான ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு நல்வழிகாட்டினார்.  நானும் பலமுறை  நிர்வாகிகளில் சிலரிடம் பேசியிருக்கிறேன். அம்மாவால் தான் உங்களுக்கு பதவி கிடைத்தது, உங்களுக்கு பதவி கிடைத்த விதம் இப்படித்தான் என்று உண்மையைச் சொன்னால், ஓ அப்படியா! என்பார்கள். 

ஆனால் அதை அவர்கள் நம்புவதில்லை என்பதை சில நிகழ்வுகளின் மூலம் உணர்ந்தேன். ஒவ்வொருவர் பதவி வாங்கிய விதத்தையும் எழுதலாம் என்று மனம் நினைக்கிறது. தொண்டர்களுக்கு அப்போதுதான் அம்மாவின் பெருமை புரியும். சிலரிடம் நீங்களே கேட்டுப்பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைச் சொல்லுவார்கள். பதவி கிடைத்தவர்கள் இனியாவது அம்மா தான் எனக்கு பதவி கொடுத்து உயர்த்தினார்கள் என்றுச் சொல்லுங்கள். அம்மாவின் ஆன்மா உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் முடிவெடுக்கும் அதிகாரம் அம்மா அவர்களிடமே இருந்தது. புரிகிறதா? என்று பதிவை நிறைவு செய்துள்ளார். 

அதாவது ஜெயலலிதா இருந்தபோது முடிவெடுக்கும் அதிகாரத்தில் சசிகலா இல்லை என்பதையும், அதேநேரம் பலரும் சசிகலாவால்தான் பதவி கிடைத்தது என்று சொல்வதாக ஜெயலலிதாவே வேதனைப்பட்டதையும்  பூங்குன்றன் பதிவு கூறுவதாகவே கருதப்படுகிறது. 

click me!