ஸ்டாலின் அம்பேத்கரை அவமதிக்கிறார்... அவரை ஊராட்சி முதல்வர்ன்னு கூப்பிடவா?... கொந்தளிந்த எல்.முருகன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 23, 2021, 2:21 PM IST
Highlights

ஒன்றிய அரசு என்று எந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்கு உள்ளது.  சட்டத்தில் இல்லதா வார்த்தையை பயன்படுத்துவது அம்பேத்கரை அவமதிக்கும் செயல்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பொறுப்பேற்ற நாள் முதலே மத்திய அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சொல்லாடலுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் கூட இந்த விவகாரம் எதிரொலித்தது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறவது ஏன் என முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என கோரினார். 

ஒன்றியம் என்ற வார்த்தையைக் கேட்டு யாரும் மிரளத் தேவையில்லை என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில் கூட்டாட்சித் தத்துவம் உள்ளது. அதனால் பயன்படுத்தினோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என்று கூறினார். இந்நிலையில் இன்று சென்னையில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் கூறியது போல் பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 

7.5 சதவீத இட ஒதுக்கீடு ஏழை எளிய மற்றும் பட்டியலின மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர உதவியுள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நீட் தேர்வை பொறுத்தவரை மாணவர்களைக் குழப்பாதீர்கள், அவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்துங்கள். 2013ம் ஆண்டு நீட் தேர்வை ஆதரித்ததே திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான். தற்போது அதை எதிர்ப்பதாக போலி மாயை உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டினார். 

தொடர்ந்து பேசிய எல்.முருகன், ஒன்றிய அரசு என்று எந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்கு உள்ளது.  சட்டத்தில் இல்லதா வார்த்தையை பயன்படுத்துவது அம்பேத்கரை அவமதிக்கும் செயல். ஒன்றிய அரசு என்று சொல்வதற்கு நாங்கள் ஏன் பதற வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என இல்லாத சொல்லை பயன்படுத்துவது தவறான ஒன்றாகும். தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசா? ஸ்டாலின் என்ன ஊராட்சி முதல்வரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
 

click me!