
1992 ஆம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிய போது சப்போர்ட் செய்தேன் எனவும் அதனால் ஒரு விருதே கிடைக்காமல் போனது எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
நடிகா் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்னா் ரசிகா்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். அந்த சந்திப்பில் 15 மாவட்ட ரசிகா்களை அழைத்து அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போதே அவா் அரசியலுக்கு வருவது தொடா்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என கூறி முடித்து கொண்டார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது இரண்டாம் கட்ட ரசிகா்களுடனான சந்திப்பை இன்று முதல் வருகிற 31ம் தேதி நடத்தி வருகிறார். இன்று காலை 8.30 மணியில் இருந்து ரசிகர் சந்திப்பு நடைபெற்றது. காஞ்சிபுரம், நீலகிரி,தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார்.
ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் அதிக ஆர்வத்தில் உள்ளன எனவும் அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும் என தெரிவித்தார்.
போர் என்று வந்துவிட்டால் ஜெயிக்கணும், அது தான் முக்கியம் எனவும் அரசியல் எனக்கு புதிது அல்ல, அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்குகிறேன் எனவும் தெரிவித்தார்.
எனினும் அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும் எனவும் பின்னர் அதற்கு பதிலளிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் 1992 ஆம் ஆண்டே ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று கூறப்பட்டது. அப்போது நான் அரசியலில் இல்லை. ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். நான் சப்போர்ட் செய்வேன் என தெரிவித்தேன். அதனால் ஒரு விருதே எனக்கு கிடைக்காமல் போனது. என குஷ்பூ பழைய நினைவுகளை அசைப்போட்டார்.