அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு கூடும் ஆதரவு..! ராஜன் செல்லப்பாவை தொடர்ந்து குன்னம் எம்.எல்.ஏ.வும் வாய்ஸ்!

By Asianet TamilFirst Published Jun 9, 2019, 10:32 AM IST
Highlights

மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதை ஆமோதிக்குவகையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றை தலைமை குறித்து வலியுறுத்த தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும் ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார்.
அதிமுக தலைமை பற்றி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்த கருத்து அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும்.  அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை.  ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை. இரு தலைமைகள் இருப்பதால் முடிவுகள் எடுக்க முடியவில்லை. இதை பொதுக்குழுவில் வலியுறுத்துவோம்.” என ராஜன் செல்லப்பா தெரிவித்த கருத்துகள் அக்கட்சியினர் விவாதிக்கும் முக்கிய பொருளாகியிருக்கிறது.

 
இந்நிலையில் ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரன். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்கிறேன். ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்தும் வரவேற்கக்கூடியது. இது கட்சித் தொண்டர்களின் வருத்தம்தான். அதைத்தைதான் நானும் பதிவு செய்கிறேன். இந்த விவகாரம் பற்றி பொதுக்குழுவில் என்னுடைய கருத்தைத் தெரிவிப்பேன். கட்சிக்குள் ஒற்றுமை இருந்தாலும், தலைவர்களுக்குள் கருத்துவேறுபாடு இருப்பதை உணர முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

 
மோடி அரசில் மத்திய அமைச்சரவையில் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி பெற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்வம் காட்டினார். ஆனால், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான வைத்தியலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வாங்கி தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரும்பியதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதை ஆமோதிக்குவகையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றை தலைமை குறித்து வலியுறுத்த தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.

click me!