இதுக்கு ஒரு முடிவே இல்லையா?... அதிமுக தலைமைக்கு அடுத்தடுத்து வரும் அதிர்ச்சி செய்திகள்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 12, 2021, 1:55 PM IST

 தேர்தலுக்கு பிறகு அடுத்தடுத்து வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது சாமானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில்  தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றின் 2வது அலைக்கு தமிழகமும் தப்பவில்லை. குறிப்பாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம், பொதுக்கூட்டம் என அதிக அளவில் குவிந்த மக்கள் முகக்கவசம் அணியாததும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததும் தான் கொரோனா தொற்று தீவிரமாய் பரவ முக்கிய காரணமாக அமைந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

தேர்தலுக்கு முன்பே திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக என கட்சி வேறுபாடின்றி பல வேட்பாளர்களும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதனால் வேட்பாளர்கள் இல்லாமலேயே வாக்கு சேகரிக்கும் சம்பவங்களும் இந்த தேர்தலில் தான் அரங்கேறியது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி இரவு 7 மணியோடு நிறைவடைந்த நிலையில், அதன் பிறகாவது வேட்பாளர்களை படாய்படுத்தும் கொரோனாவின் தாக்கம் குறையுமா? என அரசியல் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு அடுத்தடுத்து வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவின் கணவர் சுந்தர் சி,  அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், நெடுங்காடு தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து என 4 வேட்பாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ஏற்கனவே அதிமுக வேட்பாளர்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளரும், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவருமான ஸ்ரீதர் வாண்டையாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட இவர் கும்பகோணம் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொண்ட ஸ்ரீதர் வாண்டையாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தஞ்சாவூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். 

click me!