குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக போலி கடிதம் !! மலிவான விளம்பரம் என குற்றச்சாட்டு !!

By Selvanayagam PFirst Published Jul 22, 2019, 10:48 PM IST
Highlights

கர்நாடக முதலமைச்சர்  குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான போலி கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடிதம் போலியானது என்று கர்நாடக முதலமைச்சர்  குமாரசாமி அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் 2 வாரங்களாக உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.  இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. 

அன்று  சட்டசபையில் பேசிய  முதலமைச்சர்  குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து கடந்த 18-ம் தேதி முதலமைச்சர்  குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். 

அதன் மீது 2 நாட்கள் விவாதம் நடந்தது. கவர்னர் 2 தடவை கெடு விதித்தும், வாக்கெடுப்பு நடக்கவில்லை.  கர்நாடக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் இன்று கூடியது. விவாதமும், விமர்சனமும்தான் தொடர்கிறது.

இதற்கிடையே குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் எனவும் தகவல்கள் கிளம்பியது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக குமாரசாமி சட்டசபையில் கடிதமொன்றை வைத்து பேசினார். அவரது கையெழுத்திட்ட ராஜினாமா கடிதம் என சித்தரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். 

நான் என்னுடைய ராஜினாமாவை கவர்னரிடம் கொடுத்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. யார் முதலமைச்சர் ஆக வேண்டும் என காத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. 

என்னுடைய போலியான கையெழுத்துடன் ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதுபோன்ற மிகவும் மலிவான விளம்பரத்தால் அதிர்ச்சியடைந்துள்ளேன் என குமாரசாமி தெரிவித்தார்.

click me!