மாறு வேடத்தில் கேடிஆர்.?? கோட்டைவிட்ட தமிழக போலீஸ்தான் ஸ்காட்லாந்து யார்டா.? கேவலப்படுத்திய சவுக்கு சங்கர்.

By Ezhilarasan BabuFirst Published Dec 27, 2021, 2:03 PM IST
Highlights

அதுவரை போலீசார் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். அதனால்தான் இப்போதுவரை அவரை பிடிக்க முடியாத நிலைக்கு காரணம். ராஜேந்திரபாலாஜி என்பவர் ஒரு முகம் தெரியாத நபர் என்றால் கூட அவரை தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமம் என்று கூறலாம், ஆனால் அவர் பிரபலமான நபர்தான், ஏழு நாட்கள் கடந்துவிட்டது இன்னும் கூட அவரை பிடிக்க முடியவில்லை, ஆனால் தனிப்படை அமைத்து வருகிறோம் 

ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக பேசப்படும் தமிழக போலீசால்தான் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கூட கைது செய்ய முடியவில்லை என ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். காவல்துறைக்கு என்ற தனித்துவத்தை மறந்துவிட்டு முழுக்க முழுக்க தொழில்முறைமட்டுமே சார்ந்து போலீஸ்துறை இயங்குகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி ராஜேந்திர பாலாஜி. செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் அதிகம் பேசப்பட்ட அமைச்சர்களில் இவரும் ஒருவர். தான்ஒரு அதிமுக அமைச்சர் என்பதையும் மறந்து முழுக்க முழுக்க தன்னை ஒரு பாஜக தொண்டர் போலவே அவர் காட்டிக் கொண்டார் என்பதே அதற்கு காரணம். ' மோடி எங்கள் டாடி '  ' எங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் மேலே இருக்கிற (மோடி) ஆண்டவன் பார்த்துக் கொள்வான்'  ' எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது '   ' ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை'  ' எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது'  ' ஸ்டாலின் ஒத்தைக்கு ஒத்த வர தயாரா'  என பல வகையில்  சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராஜேந்திரபாலாஜி. ஜெயலலிதா இருந்தவரை கைகட்டி கும்பிடு போட்டு வந்த ராஜேந்திர பாலாஜி, அவரின் மறைவுக்குப் பின்னர் நெஞ்சை நிமிர்த்தி எதிர்க்கட்சியான திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தாரையும்  மற்ற யாரையும் விட மிக கேவலமாக பேசி விமர்சித்தவர் ஆவார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் கைது செய்யப்படுவது ராஜேந்திரபாலாஜியாகத்தான் இருக்கும் என்றும், அப்போது கூறப்பட்டது. அந்த அளவிற்கு அவர் திமுக தலைவர் ஸ்டாலினை மிக மோசமாக, தரக்குறைவாக பேசி வந்தார் என்பதே அதற்கு காரணம். இந்நிலையில்தான் கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்தார் என அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என ஜாமீன் கேட்டு ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை ரத்து செய்தததை அடுத்து, ராஜேந்திர பாலாஜி கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போலீஸ் பிடியில் இருந்து ராஜேந்திரபாலாஜி தப்பி தலைமறைவாகியுள்ளார். விருதுநகரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் தனது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டு விட்டது என்பதை அறிந்தவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் வேக வேகமாக அங்கிருந்து தலைமறைவானார். இந்நிலையில் அவர் எங்கு இருக்கிறார், யாருடன் இருக்கிறார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், சிலர் அவர் கேரளாவில் பதுங்கியுள்ளதாகவும், அவர் விருதுநகர் மாவட்டத்திலேயே பதுங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. போலீசார் இதுவரை பெங்களூருக்கும், கேரளா என பல மாநிலங்களுக்கு சென்று தேடியும் ராஜேந்திரபாலாஜி அகப்படவில்லை. அவர் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் பழைய பட்டன் மாடல் செல்போனை உபயோகித்து வருவதாகவும், அதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ட்ராக் செய்வதில் சிரமம் இருக்கிறது என்றும் போலீஸ் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அவரின் தொடர்பில் இருந்த 600 பேரில் செல்போன்களை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜேந்திர பாலாஜி இதோ நெருங்கிவிட்டோம் அதோ நெருங்கிவிட்டோம் என போலீசார் கூறி வரும் நிலையில், இதுவரையிலும் அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால் எந்த நேரத்திலும்  அவரை போலீசார் கைது செய்யக் கூடும் என தகவல் மட்டும் வெளியாகி வருகிறது. தன் மீது தவறு இருப்பதனால்தான் அவர் ஓடி தலைமறைவாகி இருக்கிறார் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ராஜேந்திர பாலாஜியை விமர்சித்து வர்கின்றனர்.

அதே நேரத்தில் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இல்லை என்றும், அவர் சட்ட ஆலோசனை பெற்று வருகிறார் என்றும், விரைவில் அவர் வெளியில் வருவார் என்றும் அதிமுகவினர் கூறி வருகின்றனர். அதேநேரத்தில் ராஜேந்திரபாலாஜி தப்பி ஓடி தலைமறைவாகி இருப்பது அதிமுகவினருக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.  இதுவரை ராஜேந்திரபாலாஜி செல்போனை பயன்படுத்தாமல் இருந்து வருவதாகவும், அதனாலேயே அவரை பிடிப்பதில் சிக்கல் இருந்து வருவதாகவும் போலீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாக உள்ளது. அதேபோல ராஜேந்திரபாலாஜி மட்டுமின்றி அவரது நான்கு தனிச்செயலாளர்களையும் இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பி விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் காவல் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய ஒரு முன்னாள் அமைச்சர், சாதாரண  திருட்டு வழக்கு கைதிகளை போல ஓடி தலைமறைவாகி போலீசுக்கு தண்ணீர் காட்டி வருவது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவர் எங்கு இருக்கிறார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வருவது, காவல்துறை மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவது காவல்துறையின் செயல்திறன் மீதே சந்தேகத்தை எழுப்புகிறது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:- தமிழக போலீசார் பிடிக்க முடியாத அளவிற்கு யாரும் பெரிய ஆள் இல்லை, ராஜேந்திர பாலாஜியும் அந்த அளவுக்கு பெரிய ஆள் ஒன்றும் கிடையாது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக காவல்துறை கோட்டை விட்டு விட்டது. இதுவரை ராஜேந்திர பாலாஜிக்காக தினம் 3 தனிப்படைகள் என போலீஸ்  இதுவரை 40க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து முடித்தாயிற்று. சமீபகாலமாக ஒரிஜினல் போலீஸ் வேலையை போலீசார் மறந்து விட்டனர் என்று தான் கூற வேண்டும். யாராக இருந்தாலும் செல்போன் சிக்னலை வைத்து பிடித்துவிடலாம் என்ற நினைப்பில் போலீசார் இருந்து வருகின்றனர். இதுதான் தற்போதைய நிலைமைக்கு காரணம். ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மீதான வழக்கு விசாரணை நடைபெறும்போது அவரை போலீசார் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்திருக்க வேண்டும். அவர் ஆர்ப்பாட்டத்திற்கு வந்து தனக்கு எதிராக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது அறிந்து அவர் அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார். 

அதுவரை போலீசார் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். அதனால்தான் இப்போதுவரை அவரை பிடிக்க முடியாத நிலைக்கு காரணம். ராஜேந்திரபாலாஜி என்பவர் ஒரு முகம் தெரியாத நபர் என்றால் கூட அவரை தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமம் என்று கூறலாம், ஆனால் அவர் பிரபலமான நபர்தான், ஏழு நாட்கள் கடந்துவிட்டது இன்னும் கூட அவரை பிடிக்க முடியவில்லை, ஆனால் தனிப்படை அமைத்து வருகிறோம் என்று போலீசார் சொல்வது இழுக்கு. ராஜேந்திர பாலாஜி சாமர்த்தியமானவரா இல்லையா என்பதைத் தாண்டி போலீஸ் சாமர்த்தியம் எங்கே போனது என்றுதான் கேள்வி எழுகிறது. ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக தன்னை புகழ்ந்து கொள்ளும் தமிழ்நாடு போலீஸ், ஒரு முன்னாள் அமைச்சரை கூட கைது செய்ய முடியாத நிலையில் உள்ளது. இது உண்மையிலேயே தமிழக காவல்துறைக்கு பெரிய அவமானம். இழுக்கு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!