கரூர்காரரிடம் தோற்றால் அது பெரிய கேவலம் !! கொதிக்கும் கோவை அதிமுக : கலக்குமா திமுக ?

By Raghupati RFirst Published Feb 14, 2022, 9:26 AM IST
Highlights

பிரபல தமிழ் வார இதழ் ஒன்று இப்படி அந்த கட்டுரையை துவக்கியுள்ளது ‘தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. ஆனால், கோவையில்தான் யுத்தம் நடக்கிறது. அது மாஜி அ.தி.மு.க. அமைச்சர் வேலுமணிக்கும், சிட்டிங் தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் நடக்கும் ஈகோ யுத்தம்.’ என்று. 

உண்மைதானா? கோயமுத்தூரில் உண்மையில் யுத்தம்தான் நடக்கிறதா? என்று அங்கே எட்டிப்பார்த்து ஒரு அலசு அலசியதில்ல் கிடைத்த ரிப்போர்ட் இதுதான்…. உண்மையே! கோயமுத்தூர் மாவட்டத்தில் சிட்டிங் மற்றும் மாஜி அமைச்சர்களுக்கு இடையில் போர்தான் மூண்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பத்துக்கு பத்து தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி வென்றது. 

அதன் பிறகும் கோயமுத்தூர் மாவட்ட தி.மு.க.வில் எந்த எழுச்சியுமில்லை. அப்படியே விட்டிருந்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், தேனை வழித்து நாக்கில் தடவிக் கொண்டது போல் வெற்றியை சுவைத்திருக்குமாம் அ.தி.மு.க. ஆனால் செந்தில் பாலாஜியை கொண்டு சென்று அங்கே பொறுப்பு அமைச்சராக அமர்த்தினார் ஸ்டாலின். சைலண்டாக வந்த செந்தில், அதன் பின் மாவட்டம் முழுக்க நடத்திய அலட்டாத அதிரடி அரசியலால் மிரண்டே போனது அ.தி.மு.க. 

மிக மிக எளிதாக கோவை மாவட்டத்தின் உள்ளாட்சி பதவிகளை வெல்ல திட்டமிட்டிருந்த அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகியுள்ளார் செந்தில். கோயமுத்தூர் மாவட்ட தி.மு.க.வினரை சைலண்டாக உட்கார சொல்லிவிட்டு, தனது சொந்த மாவட்டமான கரூரில் இருந்து ஃபைனான்ஸ் நபர்களை கூட்டி வந்து கோவை மாவட்டம் முழுக்க பூத் கமிட்டிகளில் உட்கார வைத்தார்.

குறிப்பாக கோயமுத்தூர் மாநகராட்சியின் நூறு வார்டுகளுக்கான அக்கட்சியின் பூத் கமிட்டியில் ஒரு கரூர் ஃபைனான்ஸியர் அமர்த்தப்பட்டார்.  இதில் துவங்கியது அதிரடி அதன் பின் ஒவ்வொரு விஷயத்திலும் மனிதர் பின்னி எடுத்துள்ளார். உருப்படாத சாலைகள், காற்று கூட வராத குடிநீர், லைட்டே இல்லாத மின் கம்பங்கள் என்று இருந்த நிலைகளை பெரும்பாலும் மாற்றியமைத்தார். இதன் மூலம் மக்கள் தி.மு.க. பக்கம் கொஞ்சம் திருப்தி பார்வை வீச துவங்கினராம். 

இந்த இடத்தில் தான் அலர்ட் ஆகியது அ.தி.மு.க. ‘ஆளுங்கட்சியா எந்த கட்சி இருக்குதோ அதுதான் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் இவற்றில் ஜெயிக்கும்.  அந்த வகையில கோவையை சேர்ந்த தி.மு.க.வினரிடம் நாம தோற்கலாம், அதில் அவமானமில்லை. ஆனால், கரூரில் இருந்து வந்த செந்தில்பாலாஜியிடம் நாம் தோற்றால் அது மிகப்பெரிய அவமானம். அதனால் அப்படியொரு சம்பவம் நடக்கவே கூடாது.  எப்பாடு பட்டாவது கோவை மாநகராட்சியை நாம் பிடிச்சே ஆகணும்.” என்று நெத்தியடியாக கோவை அ.தி.மு.க.வினருக்கு கட்டளையிட்டுள்ளது அம்மாவட்ட தலைமை. 

இது அப்படியே செந்தில்பாலாஜியின் கவனத்துக்குப் போக, ‘இந்த கரூர்காரனுக்காக மக்கள் ஓட்டுப்போடப்போறதில்லை. தமிழக முதல்வருக்காக மக்கள் ஓட்டுப்போடப்போறாங்க. நம்ம ஜெயிக்கிறோம், நம்மதான் ஜெயிக்கிறோம்.” என்று தன் கட்சி நிர்வாகிகளை அதிரடியாக உசுப்பியுள்ளார்.  கவனிப்போம் பாஸு!

click me!