திடீர் பண தட்டுப்பாட்டிற்கு இதுதான் காரணமா..?

First Published Apr 20, 2018, 11:00 AM IST
Highlights
kongu eswaran opinion about sudden cash crunch


தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பெரும்பாலான பணத்தை பதுக்கியிருப்பதுதான் திடீர் பண தட்டுப்பாட்டிற்கு காரணம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஒரே சமயத்தில் திடீரென பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சந்தேகத்திற்குரியது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில், பணத்தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பல மாநிலங்களுக்கு வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலும்தான் காரணம். நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தல் செலவுக்காகப் பணத்தைப் பதுக்கினாலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும். 

மிகப்பெரிய அளவிலான தொகை பதுக்கப்பட்டதால்தான், அனைத்து மாநிலங்களிலும் சீராக இருந்துவந்த பணப்புழக்கம், திடீரென முடங்கிப்போயிருக்கிறது.  இது ஏழை, நடுத்தர மக்கள், சிறு குறு தொழில்களைச் செய்துவருபவர்கள் மற்றும் வணிகர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக தேவை அதிகரித்துள்ளதால், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 

முன்பு இருந்ததைவிட அதிகப்படியானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறிவரும் நிலையில், தேவைக்கு அதிகமாக பணப்புழக்கம் இருக்க வேண்டுமே தவிர, பணத்தட்டுப்பாடு ஏற்படக் கூடாது. தற்போது, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு, கறுப்புப் பணத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் தோல்வியுற்றதை வெளிக்காட்டுகிறது. தேர்தலுக்காக அதிக அளவிலான பணத்தை அரசியல் கட்சிகள் பதுக்கியிருப்பதால்தான் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

தேர்தல் சமயத்தில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கும் தேர்தல் ஆணையம், அதன்பிறகு அரசியல் கட்சிகளைக் கண்டுகொள்வதில்லை. அரசியல் கட்சிகளால் பதுக்கப்படும் பெரும் அளவிலான தொகைதான், தேர்தல் சமயத்தில் வெளிவிடப்படுகிறது. எனவே, அரசியல் கட்சிகள் அதிகப் பணம் செலவு செய்வதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் புதிய வழிமுறைகளை வரையறுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

click me!