
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வேகம் எடுத்தது. இதுவரை 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. குறிப்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மூன்றுக்கும் மேற்பட்ட முறை விசாரணை நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறையும், கோவையில் 2 முறையும் வைத்து விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓவுமான விவேக் ஜெயராமன் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார். தற்போது சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கோடநாடு பங்களாவோடு தொடர்புடைவர் விவேக் என்பதால், அவரை சென்னையில் இருந்து கோவை வரச்சொல்லி, விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே, இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கூறப்படும் சயான், மனோஜ் உள்ளிட்டோரிடமும் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனராஜின் சகோதரர் தனபால் மற்றும் நண்பர் ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ள நிலையில், தற்போது விவேக்கிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கில் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியமான நபர்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திவருகின்றனர் தனிப்படை போலீசார். கோடநாடு பங்களா மேலாளரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பது அந்த பங்களாவிற்குள் ஜெயலலிதாவோடு சென்று வந்த சசிகலா, தினகரன், விவேக், இளவரசி உள்ளிட்டோருக்குதான் தெரியும் என்று கூறப்பட்டு வந்தது. அதனால், போலீசார் சசிகலா-வையும் அவருடன் தொடர்புடையோர்களையும் விசாரணை வளையத்திற்கு கொண்டுவந்தால் மட்டுமே கொள்ளை எதற்காக நடந்தது ? அங்கு என்ன இருந்தது என்பது தெரியும் என பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது விவேக்கிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் குறிப்பிடத்தக்கது. முதலில் விவேக், அடுத்து தினகரன், பின்னர் சசிகலாவிடம் விசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.