கோடநாடு விவகாரம் !! சயான், மனோஜ் விடுவிப்பு … ஆதாரங்கள் இல்லை என நீதிபதி கண்டிப்பு !! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு !!

By Selvanayagam PFirst Published Jan 15, 2019, 7:54 AM IST
Highlights

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் இருவர் மீதும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர்களை விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றினர்.

இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரது தூண்டுதலின் பேரிலேயே  அவர்கள் கொலை-கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

முக்கிய ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் கார் விபத்தில் பலியானார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் கைதான கேரளாவை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ‌சயனின் மனைவி, மகள் ஆகியோரும் விபத்தில் பலியானார்கள். ‌ஷயான் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்படி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு சம்பவம் தொடர்பாக ‌சயன், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைதானார்கள்.

இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது.  கடந்த 11-ந்தேதி தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல், கோடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர்.

அப்போது கோடநாடு கொலை தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.  ஆனால் தன் மீதான இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.

இதனை தொடர்ந்து அதிமுக. தொழில்நுட்ப பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து  டெல்லி தனியார் விடுதியில் தங்கி இருந்த ‌சயன், மனோஜ் இருவரையும் சுற்றி வளைத்து தமிழக போலீசார்  கைது செய்தனர். பின்னர் அவர்கள் சென்னை கொண்டுவரப்பட்டனர்.

இதையடுத்து சயன், மனோஜ் இருவரையும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். தொடர்ந்து சயன், மனோஜ் மீதான விசாரணை நீதிபதி முன்பு 4 மணிநேரம் நடைபெற்றது.  விசாரணையின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். 

விடுவிக்கப்பட்ட சயன், மனோஜ் வரும் 18ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும் விசாரணையின் போது வழக்கறிஞருடன் வரும் 18ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் பிணையுடன் வருமாறு நீதிபதி சரிதா உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!