கோடநாடு கொலை விவகாரம்... எடப்பாடியை திக்குமுக்காட வைக்க திமுக எடுத்த அதிரடி அஸ்திரம்!

By vinoth kumarFirst Published Jan 22, 2019, 12:30 PM IST
Highlights

கோடநாடு விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனவரி 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கோடநாடு கொலை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனவரி 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் காவலில் இருந்த ஓம் பகதூர் என்பவர், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், அடுத்தடுத்து மர்மமான முறையில் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார், தற்கொலை செய்து கொண்டார். சேலம், ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். இந்த சம்பங்கள் அனைத்தும் மர்மமாகவே இருந்து வந்தது.

 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் ஆகியோர்  தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்த கொலையில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் மீது, ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் அரசியல் சட்டப்படி முதல்வர் எடப்பாடி மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஜி. தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

 

ஆனால் தங்கள் அளித்த புகார் மனுவுக்கு இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனவரி 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

click me!