கூட்டணிக்கு அச்சாரம் போட்ட ராமதாஸ்... குஷியில் பாஜகவினர்!

By Asianet TamilFirst Published Jan 22, 2019, 11:31 AM IST
Highlights

பாமக நிறுவனர் மட்டும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்ததைச் சமூக ஊடங்களில் பாஜகவினரும் இந்து அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்கான அச்சாரம் இது என எதிர்க்கட்சியினரும் சமூக ஊடகங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

பாஜகவுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ட்வீட்டால் பாஜகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக கூட்டணி அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் உள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் ஆளுநர் உரையை பாமக நிறுவனர் வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட ஒரு ட்வீட்டால் பாஜகவினர் உச்சிக் குளிர்ந்துள்ளனர். 

லயோலா கல்லூரியில் நடந்த கண்காட்சியில் இந்துக்களின் உணர்வுகளை புன்படுத்தும் ஓவியங்கள் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இதனால், லயோலா கல்லூரிக்கு எதிராக பாஜக தலைவர்களும் இந்து அமைப்பினரும் கொந்தளித்தனர். லயோலா கல்லூரிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் இதுபற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட்டில், “சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது கண்டிக்கத்தக்கது. கலை வடிவங்கள் அனைவரையும் மகிழ வைக்கவே தவிர, யாரையும் காயப்படுத்துவதற்கு அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்!” என்று ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார். 

இந்த விவகாரத்தில் எல்லாக் கட்சிகளும் அமைதி காத்த வேளையில், பாமக நிறுவனர் மட்டும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்ததைச் சமூக ஊடங்களில் பாஜகவினரும் இந்து அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்கான அச்சாரம் இது என எதிர்க்கட்சியினரும் சமூக ஊடகங்களில் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

click me!