
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உயிர் தப்பிய மற்றொரு காவலாளியிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
வனத்தை ஆண்ட சிங்கம் மரித்து விழுந்துவிட்ட பிறகு சிறு புழுக்கள் கூட அச்சமின்றி அதன் மீசையில் ஊஞ்சலாடும். இதே நிலைதான் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்திருக்கும் கொலையும்!.. என்ற தொடக்கத்துடன் கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை குறித்து "NEWSFAST" விரிவாக செய்தியை பதிவு செய்திருந்தது.
வெறும் பணத்திற்காக காவலாளி அடித்துக் கொல்லப்பட்டார் என்பதில் எந்த லாஜிக்குமே இல்லை என்று கூறுகின்றனர் கொடநாடுவாசிகள்.. ஜெயலலிதா இருக்கும் வரை கனகம்பீரமாக இருந்த பங்களா அவர் மறைவுக்குப் பிறகும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தான் இருந்து வந்துள்ளது.
காவல்துறையின் ஆந்தைக் கண் கண்காணிப்பையும் மீறி ஒரு புழு கூட கொடநாடு எஸ்டேட்டிலும் , பங்களாவிலும் நுழைய முடியாது. அப்படி இருக்க கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் பங்களாவின் செக்யூரிட்டிகளில் ஒருவரான ஓம்கார் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
கொள்ளை முயற்சியுடன் ரெண்டு பொலீரா கார்களில் வந்தவர்கள் 10 அல்லது 11வது கேட்டில் உள்ள இரண்டு செக்யூரிட்டிகளை வெட்டிவிட்டு உள்ளே நுழைந்திருக்கிறார்கள், வெட்டுப்பட்டதில் ஓம்கார் இறந்துவிட இன்னொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்றொரு காவலாளியிடம் கோவை ஐ.ஜி. தீபக் தாமோர் தலைமையில் போலீசார் விடிய விடிய கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.