எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டிஎஸ்பி கனகராஜிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓட்டுநர் கனகராஜியிடம் காவல் உதவி ஆணையர் கனகராஜ் சுமார் 100 முறை செல்போனில் பேசியதாக அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. அப்போது, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டதை விசாரணை மீண்டும் சூடுபிடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படையினர் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டிஎஸ்பி கனகராஜிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஓட்டுனர் கனகராஜிடம் டிஎஸ்பி கனகராஜ் 100க்கும் மேற்பட்ட முறை பேசியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கனகராஜ் அளித்த பதில்கள் வீடியோ மற்றும் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மந்தைவெளியில் காவலர் குடியிருப்பில் உள்ள கனகராஜ் வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு சென்ற கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார், கனகராஜிடம் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சென்னை ஆவடி ஆயுதப்படை டிஎஸ்பியாக கனகராஜ் பணியாற்றி வருகிறார்.