இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றும் முதல்வர் எடப்பாடி... அதிமுகவை கிழித்து தொங்கவிட்ட கே.என்.நேரு..!

By vinoth kumarFirst Published Feb 10, 2020, 12:22 PM IST
Highlights

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து, கதிராமங்கலத்தில் போராடிய விவசாயிகளைக் கைது செய்து, நெடுவாசல் போராட்டத்திற்காக சேலத்து மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவி விட்டு, விவசாயிகளுக்காகப் போராடிய பேராசிரியர் ஜெயராமனை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்து விவசாயிகளின் மீது அடக்குமுறையையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்ட முதலமைச்சருக்கு திமுக தலைவர் பற்றிக் குறை கூற எந்த யோக்கியதையும் இல்லை.

டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதித்துவிட்டு மறுபுறம் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆக்குவோம் என்று சொல்லி அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விடுத்துள்ள அறிக்கையில்;- “18,650 கோடி ரூபாய் மதிப்பில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் பல்வேறு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்க இன்று வரை துணிச்சல் இல்லாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எங்கள் கழகத் தலைவர் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்தார் என்று அபாண்டமாக- அப்பட்டமான பொய் பேசுவதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து, கதிராமங்கலத்தில் போராடிய விவசாயிகளைக் கைது செய்து, நெடுவாசல் போராட்டத்திற்காக சேலத்து மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவி விட்டு, விவசாயிகளுக்காகப் போராடிய பேராசிரியர் ஜெயராமனை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்து விவசாயிகளின் மீது அடக்குமுறையையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்ட முதலமைச்சருக்கு திமுக தலைவர் பற்றிக் குறை கூற எந்த யோக்கியதையும் இல்லை.

 சட்டமன்றக் கூட்டத்தில் எங்கள் கழகத் தலைவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் எல்லாம் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று பொய் சொன்ன அமைச்சர்களும், முதலமைச்சரும், வேதாந்தாவிற்கும், ஓன்.சி.ஜி.க்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதி கொடுத்த போது வாய் மூடி மவுனிகளாக இருந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “மக்கள் கருத்து கேட்க வேண்டியதில்லை, சுற்றுப்புறச்சூழல் அனுமதி முன்கூட்டியே பெற வேண்டியதில்லை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சரை இன்றுவரை பதவி நீக்காதது ஏன்? சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை திரும்ப பெறவோ, அதற்கு ஒரு விளக்கம் சொல்லவோ அஞ்சி நடுங்கி ஒடுங்கிப் போயிருக்கும் முதலமைச்சர், தனக்கு அரசு விழா கிடைத்து விட்டது என்பதற்காக தி.மு.க.மீது சேற்றை வாரி இறைப்பதை எந்த தி.மு.க. தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

 அதிமுக அரசுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதில் உடன்பாடு இல்லை என்றால் இதுவரை ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதிக்காதீர்கள் என்று எந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்காவது முதலமைச்சர் உத்தரவு போட்டிருக்கிறாரா? தைரியம் இருந்தால் அப்படி போட்ட உத்தரவை அவரால் வெளியிட முடியுமா? ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று ஒரு அமைச்சரவை தீர்மானம் போடுங்கள் என்று எங்கள் கழகத் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

இன்றுவரை அப்படியொரு தீர்மானம் போடுவதற்கு வலிமை இருக்கிறதா? நெடுவாசல் போராட்டக் காரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் மன உறுதி கூட இல்லாத முதலமைச்சர், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக வீண்பழி சுமத்தி விளம்பரம் தேடிக் கொள்ள நினைப்பது வெட்கக் கேடாக இல்லையா? 

மத்திய பா.ஜ.க. அரசு – தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு - தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்ட பிறகு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்றும், கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியே பெற வேண்டியதில்லை என மத்திய பா.ஜ.க. அரசு கூறிவிட்ட நிலையில், நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்றும் முதலமைச்சர் பேசியிருப்பது ஏமாற்று வேலை” என்று குறிப்பிட்டிருக்கிறார் நேரு.

தொடர்ந்து அந்த அறிக்கையில், “துயரப்படும் விவசாயிகளின் கடன்களைக் கூடத் தள்ளுபடி செய்ய மனமின்றி - கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், காவிரி டெல்டா விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவது போல் ஒரு கபட நாடகத்தை இன்று அரங்கேற்றியிருக்கிறார். இப்படியெல்லாம் கூறிவிட்டால், 131 விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமாகவும் - அவர்களின் மீது காவல்துறையை வைத்து அராஜகத்தை ஏவி விட்டதற்குப் பொறுப்பானதுமான அதிமுக ஆட்சியின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று முதலமைச்சர் கனவு கண்டால் - அது பகல் கனவாகவே முடியும்.

ஆகவே, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் முன்பு - முதலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும். ஏற்கனவே வேதாந்தா மற்றும் ஓன்.சி.ஜி.சி. நிறுவனங்களுக்கு தமிழகத்தில் - குறிப்பாகக் காவிரி டெல்டா பகுதிகளில் அளித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்; அது மட்டுமின்றி, ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மக்கள் கருத்துக் கேட்பு கூட்டமும், சுற்றுச்சூழல் அனுமதியும் தேவையில்லை என்று தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் எழுதிய கடிதத்தை நாளையே திரும்பப் பெறுவதற்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் செய்து விட்டு, பிறகு பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று இப்போது அளித்துள்ள வாக்குறுதியை - மத்திய பா.ஜ.க. அரசுக்கு அஞ்சி பின்வாங்கி விடாமல் வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒரு புறம் பணிகள் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டு மற்றொரு புறம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பேன் என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி இரட்டை வேடம் போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

click me!