
தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழல், குழப்பத்துக்குள் மத்திய அரசு தலையிடாது. அது மாநிலத்தில் உள்ள ஒரு கட்சியின் உள்கட்சி பிரச்சினை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று தெரிவித்தார்.
அதிகாரப்போட்டி
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே அதிகாரப்போட்டி தீவிரமடைந்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்களால் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, ஆட்சி அமைக்கக் கோரி ஆளுநரிடம் கோரியுள்ளார்.
அதேபோல், காபந்து முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வமும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனக்கூறி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். இதனால், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.களும் அணி மாறி வருவதால், நாளுக்கு நாள் அரசியல் சூடுபடித்து வருகிறது.
கேள்வி
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சி இடையை அவரிடம் நிருபர்கள் தமிழக அரசியல் சூழலில் மத்தியஅரசு தலையிடுமா எனக் கேள்வி எழுப்பினர்.
உரிமை இல்லை
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ தமிழகத்தில் நடக்கும் அரசியல் குழப்பம் என்பது, அதிமுக கட்சியின் உள்கட்சிப் பிரச்சினை. இதில் மத்திய அரசு தலையிடும் என்பதற்கான கேள்வியே கிடையாது. இதில் மத்தியஅரசுக்கு எந்த பங்கும், உரிமையும் இல்லை.
உட்கட்சி சிக்கல்
தமிழகத்தில் இதை சூழல் சென்று, அரசமைப்பு எந்திரம் முறையாக பராமரிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், ஏற்பட்டால் மட்டுமே, மத்திய அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும். இது மாநிலத்தின் அரசியல் விவகாரம், ஒரு விதமான அரசியல் சூழல், ஆதலால், இதில் மத்திய அரசு தலையிடாது.
மாநில விவகாரத்துக்குள், மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும். அதிமுக கட்சியின் இரு குழுக்களுக்குள் நடக்கும் பிரச்சினை. இதில் நாங்கள் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை'' எனத் தெரிவித்தார்.
நடவடிக்கை
இந்திய-வங்காளதேச எல்லையில் சமீபத்தில் ரூ.2000 கள்ளநோட்டு பிடிபட்டது குறித்து கேட்டபோது, அவர்கூறுகையில், “ கள்ளநோட்டு ஏதேனும் பிடிபட்டால், கடந்த காங்கிரஸ் அரசு போல் செயல்பட மாட்டோம். நாங்கள் சரியாகச் செயல்பட்டு, தீர்வு காண்போம். இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுப்போம்'' எனத் தெரிவித்தார்.