குஷ்பு தவறு செய்கிறார்... குமுறும் பாஜக நிர்வாகி..!

By Thiraviaraj RMFirst Published Jul 8, 2021, 11:11 AM IST
Highlights

குஷ்புவுக்கு அதிருப்தி இருந்தால், அதை அவர் கட்சி தலைமையிடம் நேரடியாக தெரிவித்திருக்க வேண்டும்

எட்டு மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார். கர்நாடகா, ஹரியானா, திரிபுரா, இமாச்சல் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் தற்போது கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மிசோரம் மாநில ஆளுநராக உள்ள ஸ்ரீதரன் பிள்ளை கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரியானா ஆளுநராக உள்ள சத்யதேவ் நாராயன் ஆரியா திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திரிபுரா ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ் ஜார்க்கன்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சல் பிரதேச ஆளுநராக உள்ள பண்டாரு தத்தாத்ரேயா ஹரியானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய ஆளுநர்கள் பட்டியலில் ஒரு பெண் கூட இல்லை என்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். ஆளுநர் நியமனத்தில் ஏன் பாகுபாடு? என்பதாக ஜனாதிபதிக்கு குஷ்பு கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்நிலையில், புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக, குஷ்பு பொது வெளியில் கருத்து தெரிவித்தது தவறு என பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சராக பாஜக மாநில தலைவர் எல். முருகன் பதவி ஏற்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான, கமலாலயத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், புதிய அமைச்சரவையில் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு அதிகமாக இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, ட்விட்டர் மூலம் பொது வெளியில், கருத்து தெரிவித்தது தவறு. குஷ்புவுக்கு அதிருப்தி இருந்தால், அதை அவர் கட்சி தலைமையிடம் நேரடியாக தெரிவித்திருக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

click me!