"ஒரு கைதியின் கைப்பாவையை முதல்வராக ஏற்பதற்கு பதில் நான் சாகலாம்" - கட்ஜு அதிரடி

First Published Feb 25, 2017, 3:40 PM IST
Highlights


பெங்களூரு சிறையில் இருக்கும் கைதி ஒருவரின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியை உங்கள் முதல்வராக ஏற்றுக் கொள்கிறீர்களா? தமிழர்களே என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது அதற்கு தனது முழு ஆதரவையும் தந்தவர் கட்ஜு. போராட்டத்திற்கு ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். நானும் ஒரு தமிழன்தான் என்றும், அறப்போராட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்டிருந்தார் .

பின்னர் அரசியலில் குழப்பம் ஏற்பட்டபோது தமிழர்களே யோசித்து முடிவெடுங்கள் என்று தெரிவித்தார். சசிகலா சிறைக்கு சென்றுவிட்டதால் இனி அங்கிருந்துதான் தமிழக அரசு இயங்கும் என்றும் கூறினார்..

அதைப்போலவே தற்போது எடப்பாடி பழனிசாமி, இங்கு கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார் என தற்போது குற்றம்சாட்டியுள்ளார்,

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். எனதருமை தமிழர்களே, சிறைக்கைதி ஒருவரின் கைப்பாவை ஒருவர் உங்களின் முதல்வராக ஆக்கப்பட்டுள்ளார்.

நீங்கள் சோழர், பாண்டியன் மற்றும் சேரர்களின் சந்ததியர்கள். முதல்வர் நியமனத்தில் செய்யப்பட்ட சதிக்கு நீங்கள் வீழ்ந்ததை பார்த்து உங்கள் மூதாதையர்கள் அவமானப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பரின் சந்ததியினர். எந்த எதிர்ப்பும் காட்டாமல், முதல்வரை ஏற்றுக்கொண்டதால், உங்களுக்கு அசிங்கம் ஏதுமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நானும் ஒரு தமிழன் என நான் பெருமையாக கூறிவந்தேன். இனிமேல் நான் எந்த முகத்தை வைத்து கொண்டு இதனை சொல்வேன் என வேதனை தெரிவித்த கட்ஜு, எடப்பாடி  பழனிசாமி உங்களின் முதல்வராக நீடிக்கும்வரை நான் தமிழனே அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

அவமானம் மற்றும் மரியாதை பற்றி கவலைபடாமல் வாழும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் நானும் ஒரு உறுப்பினராக இருக்க விரும்பவில்லை. இதற்கு பதில் நான் இறப்பதே மேல் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

click me!