ரூட் மாறும் அமமுக வேட்பாளர்...? தேனியில் தினகரன் அணியில் சலசலப்பு?

By Asianet TamilFirst Published Mar 14, 2019, 7:49 AM IST
Highlights

வரும் தேர்தலில் பெரியகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதைவிட நீலகிரி தொகுதியில் போட்டியிட கதிர்காமு ஆர்வம் காட்டிவருகிறார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெரியகுளம் எம்.எல்.ஏ. டாக்டர் கதிர்காமு இடைத்தேர்தலில் போட்டியிடுவதைவிட நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில்   பெரியகுளம் (தனி) தொகுதியைச் சேர்ந்த டாக்டர் கதிர்காமுவும் ஒருவர். தேனி மருத்துவக் கல்லுாரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எம்.எல்.ஏ. பதவியை சுமார் ஒன்றரை ஆண்டுக்குள் இழந்தவர். ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ள 18 தொகுதிகளின் இடைத்தேர்தலில் பெரியகுளத்தில்  தினகரனின் அமமுக சார்பில் கதிர்காமு போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்.

 
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அவர் பெரியகுளத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக நீலகிரி தொகுதியைச் சுற்றி வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் தேர்தலில் பெரியகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதைவிட நீலகிரி தொகுதியில் போட்டியிட அவர் ஆர்வம் காட்டிவருவதே இதற்கு காரணம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
நீலகிரி தனி தொகுதியில் அருந்ததியர் இன மக்களின் ஓட்டு கணிசமாக இருப்பதாலும், தினகரனுக்கென உள்ள ஆதரவாலும் நீலகிரியில் வெற்றி பெற முடியும் என்று தினகரனிடம் அவர் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் நீலகிரி தொகுதியில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் உலாவருகின்றன. 
ஆனால், வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் பெரியகுளமும் ஒன்று என தினகரன் நினைக்கிறார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் என்பதால், அங்கே வெற்றி பெற்றாக வேண்டும் என்பதிலும் தினகரன் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் கதிர்காமுவின் இந்தத் தடுமாற்றம், அமமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

click me!