திமுக இல்லைனா அதிமுக... பெரம்பூர் தொகுதிக்காக அணி மாறிய கட்சி!

By Asianet TamilFirst Published Mar 14, 2019, 6:52 AM IST
Highlights

அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் திமுகவில் கிடைக்காத பெரம்பூர் தொகுதியை அதிமுகவில் கைப்பற்றும் முயற்சிகளை தனபாலன் மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
 

பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், அதிமுக கூட்டணி சார்பில் களமிறங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி  தலைவர் என்.ஆர். தனபாலன் முயற்சி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெருந்தலைவர் மக்கள் கட்சி திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்து வந்தது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடனும் தற்போதைய தலைவர் ஸ்டாலினுடம் நெருக்கமாக இருந்தவர். கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவருக்கு சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியை திமுக ஒதுக்கியது. 2011-ல் தேர்தலில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தனபாலன், 2016-ல் சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேலிடம் தோல்வியடைந்தார்.
இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட தனபாலன் ஆர்வம் காட்டிவந்தார். ஸ்டாலினிடமும் தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் தனபாலன் கடந்தமுறை தோல்வியைத் தழுவியதால், அவருக்கு பெரம்பூர் தொகுதியைக் கொடுக்கக் கூடாது அந்தத் தொகுதி திமுக நிர்வாகிகள் ஏற்கனவே திமுக தலைமையிடம் தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிடும் என்று ஸ்டாலின் அறிவித்துவிட்டார். இத்தனைக்கும் தனபாலன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் பெரம்பூரில் போட்டியிட்டார்.
திமுகவில் பெரம்பூர் தொகுதி கிடைக்காமல் போனதால், மனமுடைந்த தனபாலன் உடனே அதிமுக அணிக்கு தாவிவிட்டார். இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வெற்றிவேல் போட்டியிட உள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் திமுகவில் கிடைக்காத பெரம்பூர் தொகுதியை அதிமுகவில் கைப்பற்றும் முயற்சிகளை தனபாலன் மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
ஆனால், 18 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தவதில் அக்கட்சி உறுதியாக உள்ளது. ஆனால், பெரம்பலூரில் இரண்டு முறை போட்டியிட்டு நன்கு அந்தத் தொகுதிக்கு பரிட்சயமானவர் என்பதாலும், ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பதாலும், அவர் மீது அந்தத் தொகுதி மக்கள் அனுதாபம் கொண்டிருப்பார்கள் என்றும் அதிமுக தலைமையிடம் சிலர் எடுத்துச் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில்தான் திமுக கூட்டணியிலிருந்து விலகி தனபாலன், அதிமுக கூட்டணியில் இணைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே அதிமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதியில் என்.ஆர்.தனபாலனுக்கு சீட்டு கிடைத்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அக்கட்சியினர்.

click me!